Show all

கட்டாக் சம்பவம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல - சச்சின்

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணி வீழ்ச்சியை நோக்கி பயணித்ததும் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தண்ணீர்பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த பேட்டியில், ‘கட்டாக் மைதானத்தில் நடந்த பாட்டில் வீச்சு சம்பவம் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல. இதற்கு முன்பும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் கிரிக்கெட் மீது மிகுந்த நேசம் கொண்டிருக்கிறோம். இதனால் தோல்வி ஏற்படும் சமயங்களில், இவ்வாறு ஏமாற்றத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளாகிறோம். ஏமாற்றத்தை வெளிப்படுத்த வேறு வழி உண்டு. ஆனால் கட்டாக்கில் உங்களது (ரசிகர்கள்) உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதம் சரியான வழியல்ல. கட்டாக் சம்பவம் குறித்து ரசிகர்கள் அனைவரும் சிந்தித்து பார்த்து, முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏமாற்றத்தை இதைவிட சிறந்த வழியில் கையாள வேண்டும்’ என்றார்.

இந்த பிரச்சினை எதிரொலியாக வருகிற 11-ந்தேதி முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் கான்பூர் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்ஸ்கள் மற்றும் எந்தவித உலோக பொருட்களையும் ரசிகர்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்று கான்பூர் போலீசார் அறிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.