Show all

ஜான் ஆஷே கைது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் ஊழல் வழக்கில் ஐ.நா. சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்டிகுவா-பார்புடா நாட்டுக்கான ஐ.நா. தூதராக இருந்தவர் 61வயது ஜான் ஆஷே.

இவர் 2013-14 காலகட்டத்தில், ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் பதவி வகித்தார்.

இவர் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர், சீனாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர் லேப்செங் உள்ளிட்டவர்களிடம் இருந்து லஞ்சமாக சுமார் ரூ.8 கோடியே 45 லட்சம் பெற்றுள்ளார் என்பதே அந்த குற்றச்சாட்டு,

சீனாவில் உள்ள மக்காவ் பகுதியில் ஐ.நா. சபையின் நிதி உதவியுடன் கூடிய பல கோடி மதிப்பிலான மாநாட்டு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறுகிற கோப்பினை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனிடம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களைத் தொழில் அதிபர்களுக்கு செய்து தருவதற்காக இந்த லஞ்சப்பணம் வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் அவர் ஐ.நா. பொதுச்சபை தலைவர் பதவியை ஏற்பதற்கு முன்பாக,

ஐ.நா.வுக்கான ஆன்டிகுவா-பார்புடா நாட்டின் தூதராக பணியாற்றிய காலகட்டத்தில் இருந்தே லஞ்சம் வாங்கி வந்துள்ளார்.

இது தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜான் ஆஷே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் கூறும்போது,

ஆஷே மீது எழுந்துள்ள ஊழல் புகார்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதுதொடர்பாக நடத்தி வந்த விசாரணை குறித்து அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து, ஐ.நா. சபைக்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கு பற்றி எங்கள் சட்ட விவகாரங்கள் துறை அலுவலகத்துக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஊடகங்களில் செய்தி வந்த பின்னர்தான் இது குறித்து தெரிய வந்தது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டால், தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

கைது செய்யப்பட்டுள்ள ஜான் ஆஷே மீதான குற்றப்பத்திரிகையைப் பெடரல் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பிரீத் பராரா தாக்கல் செய்துள்ளார்.

இந்த ஊழல் வழக்கில் ஜான் ஆஷேயுடன் ஐ.நா.வுக்கான டொமினிக்கன் குடியரசின் துணைத்தூதர் பிரான்சிஸ் லாரன்ஸோ, லேப் செங், ஜெப்யின், ஷிவெய் யான், ஹெய்தி ஹாங் பியாவோ ஆகியோரும் சிக்கி உள்ளனர். அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.