Show all

மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து தமிமுன் அன்சாரியும், அருண் ரஷீத்தும் நீக்கம்.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி' என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது தொடங்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. ம.தி.மு.க,கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அடங்கிய மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்றது.

மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று வைகோ அறிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறிய அவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சி கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

இதனால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மக்கள் கூட்டியக்க போராட்டங்களில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரிக்கும், கட்சி தலைமைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை உருவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இரண்டு இடங்களில் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது

கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில் எழும்பூரில் மாநில பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் த.மு.மு.க.,தலைவர் ரிபாயி தலைமையில் பொதுக்குழு கூடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு இடங்களிலும் பொதுக்குழுக்கள் கூடுவதால் எந்த அணியின் கூட்டத்திற்கு செல்வது என கட்சியினரிடையே குழப்பம் ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று காலை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில் எழும்பூரில் கூடுவதாக இருந்த மாநில பொதுக்குழு ரத்து செய்யபட்டது.

தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரியும், இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அருண் ரஷீத்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.