Show all

பிசிசிஐ தலைவராக சஷாங் மனோகர் போட்டியின்றித் தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவராக சஷாங் மனோகர் ஞாயிற்றுக்கிழமை போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி கொல்கத்தாவில் காலமானார். இதனால் பிசிசிஐ-க்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்பட்டது.

பிசிசிஐ-யின் சிறப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், சஷாங் மனோகர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனால், சீனிவாசன் கடந்த மார்ச் மாதம் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதன் பிறகு அவரது ஆதரவாளரான ஜக்மோகன் டால்மியா, அந்த பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் டால்மியாவின் மறைவுக்குப் பின்னர் சஷாங் மனோகர் புதிய தலைவராக தேர்வாகியுள்ளார். அவரது பெயரை கிழக்கு மண்டல கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த 6 நிர்வாகிகளும் முன்மொழிந்தனர்.

தேசிய கிரிக்கெட் கிளப் (என்சிசி) சார்பில் டால்மியாவின் மகன் அபிஷேக்கும் சஷாங் பெயரை முன்மொழிந்தார். அவர் தவிர, சௌரவ் கங்குலி (மேற்கு வங்கம்), சௌரவ் தாஸ் குப்தா (திரிபுரா), கௌதம் ராய் (அஸ்ஸாம்), ஆஷிர்வாத் பெஹேரா (ஒடிஸா), சஞ்சய் சிங் (ஜார்க்கண்ட்) ஆகியோரும் சஷாங் மனோகர் பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்தனர்.

நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு காரணமாக சீனிவாசன் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பில் பி.எஸ்.ராமன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

சஷாங் மனோகர் மீண்டும் பிசிசிஐ தலைவராகியிருப்பதால் இந்த அமைப்பில் சீனிவாசனின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், அவரது ஐசிசி சேர்மன் பதவியும் ஆட்டம் கண்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.