Show all

அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட அதிமுக தடை விதித்ததையடுத்து அக்கட்சியை சேர்ந்த நடிகர், நடிகைகள் தேர்தல் களத்திலிருந்து மாயம் ஆனார்கள்.

அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகளுக்கு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தடை விதித்தார். முன்னதாக சரத்குமார், விஷால் அணி இருதரப்பிலும் அதிமுகவை சேர்ந்த நடிகர், நடிகைகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். விஷால் அணியில் ஜே.கே.ரித்திஷ், சரவணன், அஜெய் ரத்னம் போன்றவர்களும், சரத் அணியில் ராதாரவி, குயிலி, பாத்திமா பாபு, நளினி, சவுண்டப்பன் போன்றவர்களும் பரபரப்பாக வேலை செய்து வந்தனர். உறுப்பினர்களுக்கு கட்சி தடைவிதித்தையடுத்து ராதாரவி தவிர மற்ற அனைவரும் தேர்தலில் வேலைகளிலிருந்து மாயமானார்கள்.

சரத்குமார் அணி சார்பில் ராதாரவி பொதுச் செயலாளர் பதவிக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் அதிமுக கரை வேட்டி கட்டிக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால் கட்சிக்கும், அவருக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுக பேச்சாளராக அழைக்கப்பட்டு வந்த ராதாரவியை யாரும் கூட்டங்களுக்கு அழைக்கக்கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார். கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அவர் சங்க தேர்தலில் போட்டியிடாமல் விலகுவாரா என்று கேட்டபோது, ‘கட்சியே அவரை ஓரம்கட்டிவைத்திருக்கிறது. பிறகு எப்படி அவர் அவர்களது பேச்சை கேட்பார்’ என்று ராதாரவி தரப்பினர் குமுறுகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.