Show all

பாலஸ்தீனத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி.

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திங்கட்கிழமையன்று பாலஸ்தீனத்திற்கு சென்றார். அப்போது பாலஸ்தீன வளர்ச்சிக்காக 50லட்சம் டாலர் நிதி உதவியை அவர் அளித்தார்.

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது பாலஸ்தீனம், ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாலஸ்தீனம் சென்ற ஜனாதிபதி அந்த நாட்டு ஜனாதிபதி மகமூது அப்பாசுடன் ரமல்லா நகரில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது பாலஸ்தீனத்திற்கு இந்தியா தனது பொருளாதாரம் மற்றும் அரசியல் உதவியை அளிக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

காசா மற்றும் மேற்கு கரைப்பகுதி மேம்பாட்டிற்கான திட்டங்களையும் ஜனாதிபதி பிரணாப் அறிவித்தார். பாலஸ்தீனத்திற்கு இந்தியா அளித்த 50லட்சம் டாலர் நிதி உதவி குறித்துவெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (கிழக்கு) அனில்வாத்வா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

170.79 லட்சம் மதிப்பிலான 5 திட்டங்களை மேற்கொள்வதாக இரு நாடுகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீன நிர்வாகப்பகுதியில் திறன் மேம்பாடு நடவடிக்கையாக இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 120லட்சத்தில் தொழில்நுட்ப பூங்கா 45லட்சத்தில் பாலஸ்தீன ராஜிய இன்ஸ்டிடியூட் 10லட்சம் டாலர்  மதிப்பில் இந்தியா-பாலஸ்தீனம் திறன் மையத்தை காசாவில் அமைத்தல் ஆகிய திட்டங்கள் இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரமல்லாவிற்கு வந்த போது பாலஸ்தீனம் -இஸ்ரேல் இடையே கடும் மோதல் நடந்து கொண்டிருந்தது. ஜெருசலத்தில் இருஇஸ்ரேலிய போலீஸ் அதிகாரிகளை இரு பாலஸ்தீனியர்கள் கத்தியால் குத்தினர். இந்த கத்தி குத்து நிகழ்வைத் தொடர்ந்து இரு பாலஸ்தீனியர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சனிக்கிழமையன்று காசா திட்டுப் பகுதியில் இஸ்ரேல் வான் வழி தாக்குதலை நடத்தியது. அந்தப் பகுதி இஸ்லாமிய ஹமாஸ் பிரிவினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பமாக இருந்த பாலஸ்தீனிய பெண் மற்றும் அவரது 3வயது மகள் கொல்லப்பட்டனர். ரமல்லாவில் யாசர் அராபத் கல்லறைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்று அங்கு மலர் தூவி பாலஸ்தீனிய தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு இந்தியா உதவியாக இருக்கும் என்று பிரணாப் முகர்ஜி உறுதியுடன் தெரிவித்தார். ஜனாதிபதி நேற்று ஜெருசலத்திற்கு புறப்பட்டார். அங்கு அவர் செல்வதற்கு முன்பாக அல்-குத்ஸ் பல்கலைக்கழகத்தில்  உரை  நிகழ்த்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.