Show all

இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி

மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று நாள் ஆட்டங்கள் இரண்டிலும் விளையாடுவதற்காக மொமினுல் ஹக் தலைமையிலான வங்காளதேச ‘ஏ’ கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்தியா ‘ஏ’-வங்காளதேசம் ‘ஏ’ அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேசம் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி தொடக்கத்தில் தடுமாறியது. கேப்டன் உன்முக் சந்த் 16 ரன்னிலும், மனிஷ் பாண்டே ஒரு ரன்னிலும், கேதர் ஜாதவ் ரன் ஏதுமின்றியும், மயங்க் அகர்வால் 56 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா 16 ரன்களில் (28 பந்து, 3 பவுண்டரி) ஏமாற்றினார். சுழற்பந்து வீச்சாளர் நசிர் ஹூசைனின் பந்து வீச்சில் அவர் எல்.பி.டபிள்யூ. ஆனார். 125 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (25.4 ஓவர்) இழந்து நெருக்கடிக்குள்ளான இந்திய அணி 200 ரன்களை தொடுமா? என்ற கேள்வி எழுந்தது.


ஆனால் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் (73 ரன், 76 பந்து, 8 பவுண்டரி), குர்கீரத் சிங் (65 ரன், 58 பந்து, 9 பவுண்டரி), ரிஷி தவான் (56 ரன், 34 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் அரைசதம் விளாச இந்திய அணி 300 ரன்களை கடந்தது. 

4 வேகப்பந்து வீச்சாளர் உள்பட 8 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்தியாவின் இறுதி கட்ட ரன் குவிப்பை வங்காளதேசத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய ‘ஏ’ அணி 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. எக்ஸ்டிரா வகையில் வங்காளதேச பவுலர்கள் 21 வைடு உள்பட 28 ரன்களை வாரி வழங்கினர்.


பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த வங்காளதேச ஏ அணியில் சவும்யா சர்கார் (9 ரன்), அனமுல் ஹக் (0), ரோனி தலுக்தர் (13 ரன்), கேப்டன் மொமினுல் ஹக் (19 ரன்), சபிர் ரஹ்மான் (25 ரன்) உள்ளிட்டோர் சீக்கிரம் நடையை கட்டினர்.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ் (75 ரன், 8 பவுண்டரி, 2 சிக்சர்), நசிர் ஹூசைன் (52 ரன்) ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். இந்த ஜோடியை காலி செய்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குர்கீரத்சிங், எஞ்சிய 3 பேட்ஸ்மேன்களையும் தனது சுழல் வலையில் சிக்க வைத்தார். முடிவில் வங்காளதேச ‘ஏ’ அணி 42.3 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய ‘ஏ’ அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.