Show all

கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவிடம் கெஞ்சுவதை நிறுத்துங்கள்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே டிசம்பர்-ஜனவரி மாதங்களில் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் தொடர் (2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி) நடத்த திட்டமிடப்பட்டது. இந்த தொடர் நடந்தால் மோசமான நிதிநிலைமையில் தவிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘தலைநிமிர்ந்து’ விடும்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபடி இந்த போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. இதற்காக அந்த நாட்டைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜாகீர் அப்பாசும் தூது அனுப்பப்பட்டார். ஆனால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால், இப்போதைக்கு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இந்த நிலையில்  சாகித் அப்ரிடி இது தொடர்பாக நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும்...மீண்டும் ஏன் போராடுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு (இந்தியா) நம்முடன் கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றால், நமக்கும் அவர்களுடன் விளையாடுவதற்கு எந்த அவசியமும் இல்லை.

நாம் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுத்தோம். அவர்களுக்கு நம்முடன் விளையாட விருப்பம் இல்லை என்றால், அதனால் எந்த கவலையும் இல்லை. இந்தியாவுடன் விளையாடாவிட்டாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். 

இந்திய அணியை பாகிஸ்தான் எப்போதும் வரவேற்கிறது. கடைசியாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இப்படியொரு வரவேற்பை உலகின் வேறு எந்த அணிக்கும் பார்த்து இருக்க முடியாது. கடினமான நேரங்களில் இந்தியாவுக்கு நாங்கள் ஆதரவு அளித்து இருக்கிறோம். ஆனால் இது அவர்களின் அரசாங்கத்தின் முடிவை பொறுத்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் களத்தில் மோதுவதை இரு நாட்டு ரசிகர்களும் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி இவ்விரு நாடுகளும் மோதினால், அது ஆஷஸ் போட்டியை விட மிகப்பெரிய தொடராக அமையும்.

ஆனால், இந்திய அணி விளையாட தயாராக இல்லை என்றால், பிற வெளிநாட்டு அணிகளை இங்கு வந்து விளையாட வைக்க நாம் முயற்சி மேற்கொள்வதே நல்லது.

இவ்வாறு அப்ரிடி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.