Show all

2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய ‘ஏ’ அணி அதிர்ச்சி தோல்வி

வங்காளதேச ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மொமினுல் ஹக் தலைமையிலான வங்காளதேச ‘ஏ’ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட  ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் இந்திய ஏ அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா ஏ- வங்காளதேசம் ஏ அணி அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய ‘ஏ’ அணி கேப்டன் உன்முக் சந்த் முதலில் வங்காளதேசத்தை பேட் செய்ய பணித்தார்.


இதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி தொடக்கத்தில் தடுமாறியது. 82 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடிக்குள்ளானது. இதன் பின்னர் விக்கெட் கீப்பர் லிட்டான் தாசும், ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைனும் அணியை சரிவில் இருந்து காப்பாற்றி, சவாலான ஸ்கோரை அடைய வழிவகுத்தனர். லிட்டான் தாஸ் 45 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் விக்கெட் விழுந்தாலும், நசிர் ஹூசைன் நிலைத்து நின்று சதம் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச ஏ அணி 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 253 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய ‘ஏ’ அணியில் மயங்க் அகர்வால் (24 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும், கேப்டன் உன்முக் சந்தும், மனிஷ் பாண்டேவும் ஓரளவு தூக்கி நிறுத்தினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களுடன் (27.2 ஓவர்) வலுவான நிலையில் தென்பட்டதால் எளிதில் வெற்றி பெறும் என்றே தோன்றியது.

ஆனால் பேட்டிங்கில் கலக்கிய நசிர் ஹூசைன், சுழற்பந்து வீச்சிலும் விசுவரூபம் எடுக்க, இந்திய அணி ஒரேயடியாக சரண் அடைந்தது. உன்முக் சந்த் 56 ரன்னிலும் (75 பந்து, 7 பவுண்டரி), மனிஷ் பாண்டே 36 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

பின்வரிசை ஆட்டக்காரர்களில் குர்கீரத்சிங் (34 ரன், 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர மற்ற யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. மீண்டும் சொதப்பிய நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா 17 ரன்னில் (21 பந்து, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 

முடிவில் இந்திய ‘ஏ’ அணி 42.2 ஓவர்களில் 187 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் வங்காளதேச ஏ அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நசிர் ஹூசைன் 5 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹூசைன் 4 விக்கெட்டுகளும் அள்ளினர்.

தொடர் தற்போது 1-1 என்று சமநிலையை எட்டியுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.