Show all

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூதாட்டம் தொடர்பாக நீதிபதி லோதா குழு அளித்த தீர்ப்பை ஆய்வு செய்ய ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்குர், பொருளாளர் அனிருத் சௌத்ரி, ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் சௌரவ் கங்குலி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளை இந்தக் குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக ராஜீவ் சுக்லா கூறுகையில், "லோதா குழு அளித்த் தீர்ப்பு, பங்குதாரர்களின் கருத்து ஆகியவற்றின் ஆய்வறிக்கை கொல்கத்தாவில் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்' என்றார். இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்ய இன்று கொல்கத்தாவில் பிசிசியின் செயற்குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த கூட்டத்தில், பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டார். சூதாட்ட பிரச்சினை காரணமாக பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட உச்ச நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் என்ற அடிப்படையில் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீநிவாசனுக்கு முழு உரிமை இருப்பதாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் கருத்தை முன்வைத்து சில உறுப்பினர்கள் ஆதரவு ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிசிசிஐ கூட்டத்தில் இருந்து முற்றிலும் ஸ்ரீனிவாசன் விலகி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது என்று கூறி வாக்குவாதத்தில் சில உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஸ்ரீநிவாசன் பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சட்ட அந்தஸ்து இருப்பது குறித்து எந்த தெளிவும் இல்லாததால், செயற்குழு கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் பிசிசிஐ தலைவர் ஜக் மோகன் டால்மியா ஒத்திவைத்துள்ளதாக பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.