Show all

தேமுதிகவில் முல்லைவேந்தன் இணைந்துவிட்டதாக தேமுதிக வட்டாரத்தில் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திங்கள்கிழமை சந்தித்தார். தேமுதிகவில் முல்லைவேந்தன் இணைந்துவிட்டதாகவும் அந்தக் கட்சி சார்பில் கூறப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து, திமுகவிலிருந்து மொத்தம் 33 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதில், தருமபுரி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த முல்லைவேந்தனும் ஒருவர். பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட அனைவரின் விளக்கமும் ஏற்கப்பட்டு, கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், முல்லைவேந்தன் மட்டும் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தை முல்லைவேந்தன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

தேமுதிகவில் சேர்ந்தாரா? விஜயகாந்த்துடனான சந்திப்பின்போது முல்லைவேந்தன் தேமுதிகவில் இணைந்துவிட்டதாகவே அந்தக் கட்சி சார்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விஜயகாந்த் பிறந்த தினமான செவ்வாய்கிழமை (ஆக.25) அன்றோ, அல்லது ஓரிரு நாளிலோ வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.