Show all

நியூசிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதலாவது ஆட்டம் செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. ஹசிம் அம்லா 124 ரன்னும், ரோசவ் 89 ரன்னும் எடுத்தனர். 21–வது சதத்தை எட்டிய ஹசிம் அம்லா, தென் ஆப்பிரிக்க வீரர்களில் அதிக சதம் (21 சதங்கள்) அடித்தவரான கிப்சின் சாதனையை சமன் செய்தார்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 284 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த மார்ச் மாதம் உலக கோப்பை அரைஇறுதியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு தென் ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுத்திருக்கிது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 60 ரன்னும், கேப்டன் கனே வில்லியம்சன் 47 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஸ்டெயின், பிலாண்டர், இம்ரான் தாஹிர், டேவிட் வைஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டென் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.