Show all

பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகரை போலீஸார் கைது செய்தனர்.

பல்வேறு சிலைகள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் 22 கிலோ எடையுள்ள பஞ்சலோக சிவன், பார்வதி சிலைகள் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி திருடு போனது.

அதன் பின்னர், திருவண்ணாமலை வந்தவாசி ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி பஞ்சலோக சிலைகள் ஜனவரி 10-ஆம் தேதி திருடப்பட்டன. அதற்கடுத்த சில நாள்களில் வந்தவாசியை அடுத்த பையூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி பஞ்சலோக சிலைகள் என மொத்தம் 8 சிலைகள் திருடப்பட்டன.

இந்தச் சிலைகள் அனைத்தும் ராஜராஜ சோழன் காலத்துக்கும் முந்தையதாகும். சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு ரூ. 77 கோடி ஆகும். இதுகுறித்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், திரைப்படத் துறையில் மேலாளராகப் பணிபுரியும் சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த தனலிங்கம் என்பவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து 2 சிலைகளை மீட்டனர். மேலும், அவர் அளித்த தகவலின் பேரில் மற்ற 6 சிலைகளும் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்து தனலிங்கத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கருணாகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில், பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான வி.சேகரிடம் போலீஸார் புதன்கிழமை இரவு விசாரணை நடத்தினர்.

இதில், 3 கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை வி.சேகர் வீட்டில் பதுக்கியதும், சிலைத் திருட்டு கும்பலுக்கும், சர்வதேசக் கும்பலுக்கும் இடையில் அவர் தரகராக இருந்து பேச்சுவார்த்தை நடத்தியதும் தெரியவந்தது. மேலும், சிலைத் திருட்டு கும்பலுக்கு வி. சேகர் பல்வேறு வகையில் உதவியதற்கான ஆதாரங்களும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வி.சேகரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மாரி என்கிற மாரீஸ்வரன், சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 15 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், தமிழ்த் திரைத்துறையில் உள்ள 2 முக்கிய நபர்களும் இதில் சிக்குவார்கள் என்று சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். கைதான வி. சேகருக்கு பிற சிலை திருட்டுச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இயக்குநர் வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிலை திருட்டு வழக்கில் பிரபல இயக்குநர் கைதான சம்பவம் திரைத்துறையினரையும், காவல் துறையினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட வி.சேகர் ”நீங்களும் ஹீரோதான்', ”கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', ”காலம் மாறி போச்சு' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.