Show all

இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஏ அணி.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளின் ஏ அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதன்படி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதின. இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் அனைத்து லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். கவாஜா 76, பர்ன்ஸ் 41 ரன்கள் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.

பிறகு ஆடிய இந்திய ஏ அணி 142 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குர்கீரத் சிங் - சாம்சன் ஆகிய இருவரும் கடைசி வரை பொறுப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்கள். குர்கீரத் சிங் 87, சாம்சன் 24 ரன்கள் எடுத்தார்கள். 6 விக்கெட் இழப்பில் 43.3 ஓவர்களில் இலக்கை எட்டி சாம்பியன் ஆனது இந்தியா ஏ அணி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.