Show all

இந்திய ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

இந்தியா- தென்ஆப்பிரக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணி மயாங் அகர்வால் (176), உன்முக் சந்த் (64), மணீஷ் பாண்டே (108 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.

372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக டி காக், டெல்போர்ட் களம் இறங்கினர். டெல்போர்ட் 18 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து டி காக் உடன் ஹென்றிக்ஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய டி காக் 113 ரன்னில் அவுட் ஆனார்.

அந்த அணி 29.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து சோண்டோ களம் இறங்கினார். இவர் அதிரடி காட்டி 60 பந்தில் 86 ரன்கள் குவித்தார். நிதானமாக விளையாடிய ஹென்றிக்ஸ் 109 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். என்றாலும் தென்ஆப்பிரிக்காவால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்தியா ‘ஏ’ அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய ‘ஏ’ அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு லீக் போட்டியிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.