Show all

பயிற்சி ஆட்டத்தில் இஷாந்த் சர்மா அபாரம்

கொழும்பில் நேற்று தொடங்கிய இந்தியா - இலங்கை வாரியத் தலைவர் அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும் தவானும் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடினார்கள். ராகுல் 43, தவான் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ரோஹித் சர்மாவும் கோலியும் வந்த வேகத்தில் திரும்பினார்கள். இருவரும் முறையே 7, 8 ரன்கள் எடுத்தார்கள். புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே சிறப்பாக ஆடி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாளான இன்று, தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி பந்துவீச்சாளர் ரஜிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பிறகு ஆடிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. முதல் 10 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இந்த 5 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார். இறுதியில், 31 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இஷாந்த் 5, அஸ்வின் 2, ஆரோன் 2, ஹர்பஜன் 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 31, ராகுல் 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.