Show all

முதல் போட்டியிலேயே பிரான்ஸ் அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

இரண்டு ஆட்டத்தொடர்கள் கொண்ட ஐரோப்பியன் டூர் ஹாக்கி போட்டியில் பிரான்ஸ் அணியுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதியது. இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே இந்திய வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடினர். குறிப்பாக, இந்திய வீரர்கள் சிங்கெல்சானா சிங் மற்றும் எஸ்.வி. சுனில் ஆகியோர் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே கோல் அடித்தனர். தொடர்ந்து முன்னிலையில் இருந்த இந்திய அணி பிரான்ஸ் அணியின் கோல் முயற்சிகளை லாவகமாக தடுத்து நிறுத்தியது. இறுதியில் 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றார். 6-வது சீனியர் ஏஆர்டி ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மகளிர் வால்ட் பிரிவில் தீபா கர்மாகர் 14.725 புள்ளிகளைப் பெற்று வெண்கலம் வென்றார். இதேபிரிவில் சீனாவின் யான் வாங் 14.988 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், ஜப்பானின் சாயி மியாகாவா 14.812 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், “இந்தியாவின் பதக்க வேட்டையை தீபா கர்மாகர் தொடங்கி வைத்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.