Show all

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் நீக்கம்

கடந்த ஜனவரி மாதம் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நெதர்லாந்தின் பால் வான் ஆஸ் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

பெல்ஜியத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி கண்ட தோல்விக்கு எவ்வித அறிக்கையும் கொடுக்காதது, மலேசியாவுக்கு எதிராக காலிறுதிப் போட்டியின் போது ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரேந்திர பத்ராவுடன் மோதல் போக்கை கடைபிடித்தது போன்றவை பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பால் வான் ஆஸ் கூறுகையில், ''என்னை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனை எனக்கு இந்திய அணியின் செயல்திறன் இயக்குநர் ரோலண்ட் தான் தெரிவித்தார். இது தொடர்பாக ஹாக்கி இந்தியா அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை. விரைவில் இதுகுறித்து வெளியிடுவார்கள் என நினைக்கிறேன்,'' என்றார்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து பால் வான் ஆஸ் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஆனால், பயிற்சியாளர் பதவியில் இருந்து பால் வான் ஆஸ் நீக்கப்படவில்லை என ஹாக்கி இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.