Show all

ஜிம்பாவே அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி வென்றது இந்தியா

ஜிம்பாவே அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி வென்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசியது. இந்திய அணி தொடக்க வீரர்களாக கேடன் ரகானே, முரளி விஜய் களமிறங்கினர்.

விஜய் 1, ரகானே 34, மனோஜ் திவாரி 2, உத்தப்பா 0 மற்றும் கேதார் ஜாதவ் 5 ரன் என அனைவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். இதனால் இந்திய அணி 24.2 ஓவரில் 87 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ராயுடு - பின்னி ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 160 ரன் சேர்த்தது. இது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் புதிய சாதனையாக அமைந்தது. டோனி - யுவராஜ் ஜோடி ஜிம்பாப்வேக்கு எதிராக 158 ரன் எடுத்ததே முந்தைய சாதனை ஆகும்.

இறுதியாக இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன் குவித்தது. ராயுடு 124 ரன் (133 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), அக்சர் பட்டேல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் சிபாபா, டிரிபானோ தலா 2, விட்டோரி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி சற்று பொறுப்புடன் விளையாடியது இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் சிறப்பாகப் பந்துவீசி 5 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்னால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பந்துவீச்சில் பின்னி, அக்சர் தலா 2, ஹர்பஜன், புவனேஷ்வர், குல்கர்னி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ராயுடு ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.