Show all

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பு செய்வது என முடிவு

மீனவர் பிரச்சினையில் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் இருக்கும் நடுவண்-மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பு செய்வது என மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காரைக்காலைச் சேர்ந்த காரைக்கால்மேடு கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில், காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, காசாக்குடிமேடு, கோட்டுச்சேரிமேடு, அக்கம்பேட்டை, காளிகுப்பம், மண்டபத்தூர், மதகடி, கருக் களாச்சேரி, பட்டினச்சேரி, வாஞ்சூர் ஆகிய 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் புதுக்கோட்டையிலிருந்து சென்று மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட காரைக்கால்மேட்டை சேர்ந்த 3 மீனவர்கள் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது,

மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை வசம் இருக்கும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் 11 விசைப்படகுகள் மற்றும் தமிழக மீனவர்களின் 75 விசைப்படகுகளும் விடுவிக்கப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில்,

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களுக்கு வருகிற 14-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

 

ஒட்டுமொத்த 11 மீனவ கிராமங்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதால் சுமார் 15 ஆயிரம் மீனவர்களின் ஓட்டுக்கள் கேள்விக்குறியாகி உள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவிற்காக மாவட்டத் தேர்தல் துறையும், சுவீப் இயக்கமும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மீனவர்கள் அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.