Show all

சபரிமலை செல்ல முடியாமல் திரும்பினார் திருப்தி தேசாய்! வென்றது பாஜகவின் அதிகார ஆளுமை

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல், பாஜக மற்றும் பல்வேறு ஹிந்துத்துவா ஆணாதிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் விமான நிலையத்திலிருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. விமான நிலையத்துக்கு வெளியே  போராட்டம் நடந்து வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல, ஏராளமான பாஜகவினர் கூடினர். இதனால் பதட்டம் அதிகரித்தது. விமான நிலையத்துக்குள் கூடி தொடர்ந்து அவர்கள் சாமியே ஐயப்பா என்று முழங்கிக் கொண்டிருந்தனர். 

போராட்டம் தீவிரமாகியதால் அவரை வெளியே அழைத்துச் செல்ல மறுத்த காவல் துறையினர் மீண்டும் புனேவுக்கு செல்லுமாறு திருப்தி தேசாயிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஐயப்பன் கோயிலுக்கு செல்லாமல் திரும்ப மாட்டேன் எனக் கூறி அவர் மறுத்து விட்டார். பின்னர் விமான நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதால் உடனடியாக வெளியேறுமாறு விமான நிலைய ஆணைய அதிகாரிகள் திருப்தி தேசாயை வற்புறுத்தினர்.


 

ஆனால் அவர் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் வெளியேற முடியாது எனக் கூறினார். திருப்தி தேசாயும், அவருடன் வந்த பெண்களும் விமான நிலையத்தில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்தனர். சுமார் 14 மணிநேரம் முடிந்த நிலையில் மாலை 6:00 மணியளவில் விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமானோர் கூடியபடி திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து சாமியே ஐயப்பா முழக்கமிட்டனர். போராட்டம் நடத்துபவர்கள் விமான நிலையத்திலேயே இரவு தங்கி போராட்டம் நடத்த ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

இதையடுத்து கேரள மாநில அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு நேரம் ஆனதால் கடைசி விமானத்தை விட்டு விட்டால் மீண்டும் புனேவுக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படும் என திருப்தி தேசாயை எச்சரித்தனர்.

இதையடுத்து அவர் புனே திரும்பிச் செல்வதாக ஒப்புக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில் ''சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாலேயே நான் திரும்பிச் செல்கிறேன். யாருக்கும் பயந்து இங்கிருந்து செல்லவில்லை. மீண்டும் வருவேன், விரைவில் சபரிமலை செல்வேன். எனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை'' எனக் கூறினார்.

கொச்சி விமான நிலையத்தை போலவே, புனேயில் உள்ள திருப்தி தேசாய் வீட்டின் முன்பு ஐயப்ப சேவா சங்கத்தினர், மலையாள சமாஜத்தினர் திரண்டு அவருக்கு எதிராக போரட்டம் நடத்தினர். சபரிமலைக்கு செல்ல வேண்டாம், புனேவுக்கு திரும்பி வருமாறு முழக்கம் எழுப்பினர். 

தோற்றது திருப்தி தேசாயா? காவல்துறையா? பெண்ணுரிமையா? கேரள மாநில அரசா? உச்ச அறங்கூற்று மன்றமா? இந்திய அரசியல் அமைப்பா? பொதுவுடைமை கட்சியின் கையாலாகத்தனமா? எப்படியிருந்தாலும் சரி. வென்றதென்னவோ பாஜகவின் அதிகார ஆளுமையே

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,974.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.