Show all

பலன் சுழியம்! உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் வாங்க தீர்மானித்திருக்கும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக, ஆணையத்திடம் புகார்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிலையன்ஸ் ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான நாள்முதல், அதிரடி சலுகை மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. முதலிடத்தில் இருந்த ஏர்டெல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் சரிவை சந்தித்தன ; சில நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. 

அனைத்து மிடுக்குப்பேசிகளிலும் இரண்டு செறிவட்டைகள் பயன்படுத்தும் வசதி இருப்பதால், பெரும்பாலும் ஜியோவே முதல் தேர்வாக இருக்கிறது. ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்றவை இரண்டாம் செறிவட்டையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பழைய அழைப்புகளை, தொடர்ந்து பெறுவதற்காக அதே எண்களை வாடிக்கையாளர்கள் கட்டணஏற்றம் செய்யாமல் உள்வரும் அழைப்புகளுக்கு மட்டும் பயன் படுத்தி வருகிறார்கள். 

இதனால் அந்த நிறுவனங்கள் இதுவரை இலவசமாக கொடுத்து வந்த உள்வரும் அழைப்புகளுக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ35வது செலுத்த வேண்டும் என்று நிர்ணயித்து, அப்படி செலுத்தாத பல்லாயிரம் தொடர்புகளை துண்டிக்க முடிவு செய்துள்ளன. 

பல ஆண்டுகளாக அந்த நிறுவனங்களுக்கு போட்டியே இல்லாமல், ஒரு ஜபி தரவை ரூ150 வரை கொடுத்து பல ஆண்டுகள் வாங்கி, அந்த நிறுவனங்களுக்கு பல ஆயிரங்ளை அழுதவர்கள் இந்த வாடிக்கையாளர்கள். 

அந்த நிறுவனங்கள் ஜியோவோடு போட்டியிட்டு இன்றைக்கும் நிற்க முடிகிறது என்றால், இந்த மக்கள் அழுத, அந்தத்  தொகையில்தான். அந்தத் தொகைக்கு வாழ்நாள் முழுவதும் அந்த நிறுவனங்கள் இந்த மக்களுக்கு உள்வரும் அழைப்புகளை இலவசமாக கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது. 

இன்றைக்கு எல்லா நிறுவனங்களும் ஒரு ஜிபி தரவுக்கு வாங்கும் தொகை என்ன தெரியுமா? ரூ399க்கு 84 நாட்களுக்கு 1.4ஜிபி விதம் 120 ஜிபி வழங்குகிறார்கள். 

அப்படியானால் ஒரு ஜிபி விலை மூன்று ரூபாய் முப்பத்தி மூன்று காசு ஆகும். ஜியோ வருவதற்கு முன்பு வரை அந்த நிறுவனங்கள் இன்றைக்கு 399க்கு வழங்கும் 120 ஜிபிக்கு ரூ12000ல் இருந்து 18000 வரை வசூலித்திருக்கின்றன. 

ஆனால் அந்த நிறுவனங்கள் உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் வாங்க முடிவு செய்தது தங்களை வாழவைத்த வாடிக்கையாளர்களுக்கு செய்யும் மிகப் பெரும் துரோகம் ஆகும்.

கடும் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைத்தில் புகார் தெரிவித்தனர்.

ஏராளமான புகார்கள் வந்த நிலையில், மாதம் குறைந்தப்பட்ச கட்டணயேற்றம் செய்யாத காரணத்துக்காக எண்களின் அழைப்பை துண்டிக்கக் கூடாது என்றும், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சேவை காலாவதி ஆகும் தேதி குறித்த விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், காலவதி ஆகும் தேதிக்கு முன்பே இணைப்பை துண்டிக்கக் கூடாது என்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. 

உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் வாங்கக் கூடாது என்றெல்லாம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வில்லை. 

உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்த அறிவுறுத்தி எச்சரிக்கை செய்யுமாறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மென்மையாக பாம்பும் சாகாமல், தடியும் உடையாத அணுகுமுறையை கையாண்டிருக்கறது. வாடிக்கையாளர்கள் புகாருக்கு அவ்வளவுதான் பலன். 

ரிலையன்சும் இதே பிரச்சனையை மக்கள் பாதிக்காத வகையில் வேறு வகையாக கையாண்டிருக்கிறது. ரிலையன்ஸ் தன்னுடைய 2ஜி சேவையையே முழுமையாக நிறுத்தி விட்டது. ஆனால் அந்த வாடிக்கையாளர்களில் விருப்பம் இருப்பவர்களுக்கு ரூ500க்கு அதே எண்ணுக்கு 4ஜி செறிவட்டையை செல்பேசியோடு, வழங்கி சாதித்திருக்கிறது. அந்த வகையான பேசியை விரும்பாதவர்கள் கோபம் கொள்ளாமலே வேறு தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு மாறியிருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,986.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.