Show all

வைகோவை நம்பி எந்த கட்சியும் போகமாட்டார்கள்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த கோரி ராணுவ வீரர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.  தற்போது அவர்களின் கோரிக்கையை நடுவண் அரசு பரிசீலனை செய்து ஒரே ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் ராணுவ  அதிகாரிகள் சங்க தலைவர் கர்னல் பாண்டியன் தலைமையில், முன்னாள் ராணுவ வீரர்கள் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை  தி. நகரில் உள்ள  தலைமை அலுலவகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:

முன்னாள் ராணுவ வீரர்களின் 42 ஆண்டுகால  கோரிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசு நிறைவேற்றி உள்ளது. ராணுவத்தில் 13 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 25 லட்சம் பேர் முன்னாள்  ராணுவத்தினர். 6 லட்சம் விதவைகள் ஆகிய அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.

இதற்காக ரூ. 12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால்,  அவர்களுக்கும் இந்த திட்டத்தின் சலுகைகளை வழங்க பிரதமர் மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடத்துவதை  நாங்கள் வரவேற்கிறோம். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதை பலர் குறை கூறுகிறார்கள். நாட்டின் நம்பிக்கையை விதைக்க தான், பிரதமர்  மோடி வெளிநாடுகளுக்கு செல்கிறார். அதன்பலனாக தான் இன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர். தமிழக அரசு உலக  முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகின்ற அதே நேரம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சாலை, மின்சாரம் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

மின்சார வசதிகள் செய்து தராததால் ஒரு சில கம்பெனிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிப்போன வரலாறும் உண்டு.

வைகோ தலைமையில் ஐவர் அணி  கூட்டணி உருவதாக சொல்லப்படுகிறது என்று நிருபர்கள் கேட்டதற்கு,  வைகோவை நம்பி எந்த கட்சியும் போகமாட்டார்கள், அது பலனும் தராது,  பலவீனமாகதான் போகும். தமிழகத்தை அவர் போராட்ட களமாக தான் பார்க்கிறார். ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை.  இலங்கை பிரதமர் ரணில் இந்தியா வரும் போது, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி மூலம்  வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.