Show all

கூட்டாட்சி தத்துவத்திற்கு மாறானது என்று ஜிகே.வாசன் கண்டனம்.

தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியதும், விவசாயிகளுக்கு எதிரானதும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மாறானதும் ஆகும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக கொடுக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 31 ம் தேதி வரை 94 டி.எம்.சி தண்ணீர் காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் திறந்து விட்டிருக்கப்பட  வேண்டும். ஆனால் கர்நாடகம் அங்கு மழை பெய்கின்ற போதும், வெள்ளம் ஏற்படுகின்ற போதும் கிடைக்கும் உபரி நீரை மட்டும் அவ்வப்போது தமிழகத்திற்கு கொடுக்கின்றது.

இதன் மூலம் தமிழகம் பெற்றது இது வரை 67 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே. இது அம்மாநில அரசின் நியாயமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

மேலும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது; இது விவசாயிகளுக்கு எதிரானது; கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாறானது.எனவே உச்ச மன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தை அமைத்திட வேண்டும்; நதிநீர் பங்கீட்டு குழுவையும் அமைத்திட வேண்டும்.

இரு மாநிலங்களுக்கும் இடையேயான தண்ணீர் பிரச்சினை குறித்து பிஜேபி அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தமிழக விவசாயிகள், குறிப்பாக டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்.எனவே நடுவண் அரசு காவிரிப் பிரச்சினையில் மவுனம் காக்காமல், உடனடியாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசும் இப்பிரச்சினையில் ஒருங்கிணைந்து மத்திய அரசை கண்டிப்போடு வலியுறுத்தி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.