Show all

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநர்

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜே.மஞ்சுளா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டி.ஆர்.டி.ஒ.-வின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் பொது இயக்குநராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.  மஞ்சுளா ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பயின்றார். முதுநிலை படிப்பை முடித்தப் பிறகு 1987-ம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு படிப்படியாக பதவி உயர்வு பெற்று, டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் சிறந்த விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் மஞ்சுளா டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டார். அந்த நிறுவனத்தில் முதல் முறையாக பெண் ஒருவர் பொது இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இதையடுத்து மஞ்சுளா வௌ;ளிக்கிழமை முன்னாள் இயக்குநர் கிரண் நாயக்கிடம் இருந்து மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் பொது இயக்குநர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  மஞ்சுளா சிறப்பாக பணியாற்றியதற்காக 2011-ம் ஆண்டு, டி.ஆர்.டி.ஓ. விருது பெற்றுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டி.ஆர்.டி.ஓ.வில் பணியாற்றிய போது, மஞ்சுளா அவருடன் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு தேவைக்காக கடந்த 1958-ம் ஆண்டு டி.ஆர்.டி.ஒ. நிறுவனம் தொடங்கப்பட்டது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு, ஆயுத உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு கருவிகளை கண்டறிந்து, உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தில் 5 ஆயிரம் முதுநிலை விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர்.  நாடு முழுவதும் உள்ள 52 ஆய்வு மையங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். அக்னி ஏவுகணை, பிருத்வி ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து சர்வதேச நாடுகளுக்கு டி,ஆர்,டி.ஓ. பெரும் சவாலாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.