Show all

அமமுகவுக்கு பொதுச்சின்னம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்ச அறங்கூற்றுமன்றம் பரிந்துரை

உச்சஅறங்கூற்று மன்றம்- அமமுகவிற்கு சமையல்குடுவை சின்னம் வழங்க வியலாது என்று தெரிவித்து, அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் இராகிநகரில் சமையல்குடுவை சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அதனால் உளவியலாக தினகரனுக்கு சமையல்குடுவை சின்னம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

அரசியல் கட்சியாக அமமுகவை அவர் பதிவு செய்திருந்தால், அது எளிதாக சாத்தியமாகியிருக்கும். ஆனால் அவர் அமமுகவை வெறுமனே ஒருங்கிணைப்பிற்கான தற்காலிக இயக்கமாக வைத்துக் கொண்டு அதிமுகவை மீட்கும் உளவியல் நோக்கத்தில் அமமுகவை பதிவு செய்;யாமல் இருக்கிறார். 

இப்படியான நிலையில் தேர்தல் ஆணையத்தின் கண்ணோட்டத்தில் அமமுக சார்பாக நிற்கும்- பொதுத் தேர்தலுக்கான பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர்கள், இடைத்தேர்தலுக்கான சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சைகள்தாம். அமமுக அத்துனை வேட்பாளர்களுக்கும் அத்தனை வகையான சின்னம் ஒதுக்குவோம் என்று தேர்தல் ஆணையம் முரண்டு பிடிக்கலாம். ஏறத்தாழ தேர்தல் ஆணையம் அந்த வகையான முரண்டு பிடிப்பில்தான் ஈடுபட்டிருக்கிறது. 

இந்த நிலையில் அமமுக சார்பாக நிற்கும்- பொதுத் தேர்தலுக்கான பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர்கள், இடைத்தேர்தலுக்கான சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் பரிந்துரை செய்துள்ளார்.

தமிழகத்தில் 40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில கிழமைகளுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சமையல்குடுவை சின்னம் ஒதுக்கக் கோரி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசரணைக்கு வந்தபோது தனிநபர் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொது சின்னம் ஒதுக்கப்படுகிறது. இந்த இரண்டு வகையிலும் அமமுக வராது என கூறி சமையல்குடுவை சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசரணைக்கு வந்தது. அப்போது, சுயேட்சை வேட்பாளருக்கான சின்னத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் முதலில் அமமுகவை கட்சியாக பதிவு செய்யுங்கள் என்றும் தலைமை அறங்கூற்றுவர் கூறினார். அதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர், உடனடியாக பதிவு செய்கிறோம், சமையல்குடுவை சின்னத்தை ஒதுக்குங்கள் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு தேர்தல் ஆணையம் இன்றே பதிவு செய்தாலும் சின்னம் ஒதுக்க 30 நாள் ஆகும் என விளக்கம் அளித்தது. குழப்பத்தை தவிர்க்க ஏன் தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தலைமை அறங்கூற்றுவர் கேள்வி எழுப்பினார். அதனையடுத்து குக்கர் சின்னம் வழங்க உச்சஅறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்து அமமுக அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.