Show all

ஆம் சந்திரபாபு நாயுடு! மாநில சுயாட்சியின் பிறப்பிடமான தமிழகம் வழங்காத ஒரு மாவீரனை, ஆந்திரமாநிலம் வழங்கியிருக்கிறது

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திராவிட நாடு கோரிக்கை வைத்து, அதற்காகவே கட்சி தொடங்கி. மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்றெல்லாம் முழங்குகிற தமிழகத்தில், அதற்காகவே பேசுகிற கட்சிகளுக்கு மட்டுமே தமிழகத்தில் இடம் என்கிற தமிழகத்தில், தேசியவாதம் பேசுகிற கட்சிகளுக்கெல்லாம் நோட்டாவிற்கு அடுத்த இடம்தான் என்ற நிலைபாடுடைய தமிழகத்தில், எதற்கெடுத்தாலும் நடுவண் குற்றப் புலணாய்வுத் துறையைக் கூப்பிடுகிற தன்னம்பிக்கையற்ற அரசியல்வாதிகளைத்தான் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இப்படி நெடிய வரலாறு உள்ள தமிழகத்தில் எழாத மாவீரன், தென்னக மண்ணில், சுந்தரத் தெலுங்கு மொழியில் கிளம்பியிருப்பது பேராச்சரியம். மகிழ்ச்சி!

ஆந்திர அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வழக்கு விசாரணக்காக ஆந்திராவிற்குள் நுழைய கூடாது என முதல்வர், மாநில சுயாட்சி செம்மலாக, சந்திரபாபு நாயுடு தடை விதித்துள்ளார். தமிழ்நாட்டில் நடுவண் குற்றப்புலனாய்வுத்துறையும், வருமான வரித்துறையும் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தும் அதிகாரப் போக்குதான் சந்திரபாபு அவர்களுக்கு  இப்படியொரு தடை போடும் விழிப்புணர்வைத் தந்ததா?  என்கிற கேள்வியை பலரும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத மோடியையும், பா.ஜ.க.வையும் கடுமையாக குற்றஞ்சாட்டி வரும் சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எதிரான அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். விரைவில் மம்தா பானர்ஜியையும் சந்திக்கவுள்ளார்.

வரும் வியாழக் கிழமை டெல்லியில் நடைபெறும் எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பாஜகவிற்கு எதிரான வலுவான கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்திற்கு காரணகர்த்தாவே சந்திரபாபு நாயுடு தான்.

இந்நிலையில் ஆந்திர அரசிடம் முன் கூட்டியே தகவல் தெரிவிக்காமல், வழக்கு விசாரணை தொடர்பாக நடுவண்குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆந்திராவிற்குள் நுழைய தடை விதித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத மாநில அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நடுவண் குற்றப் புலனாய்வுச் சோதனையிட, சம்பந்தபட்ட மாநில அரசிடம் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். இதில் தான் மாவீரன் சந்திரபாபு அவர்கள் 'முற்றுகை' வைத்துள்ளார்.

இனி ஆந்திராவில் மத்திய அரசு அலுவலகங்கள் தவிர வேறெங்கு சோதனை நடத்த வேண்டுமென்றாலும், நடுவண்குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.

இதுகுறித்து ஆந்திர ஊடக வட்டாரங்களில் பேசியபோது, செயலலிதாவின் மறைவிற்கு பிறகு நடைபெற்ற அரசியல் ஆட்டங்கள் சந்திரபாபு நாயுடுவை விழிப்படைய வைத்துள்ளது. முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவின் வீடு, அலுவலகங்கள் சோதனைக்குள்ளானது. தலைமைச் செயலகத்திற்குள்ளேயே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடுவண்குற்றப்புலனாய்வுத் துறை சோதனை நடைபெற்றது.

முதல்வருக்கு நெருக்கமான உறவினர்கள், தொழிலதிபர் வீடுகளை சோதனை என்கிற பெயரில் புரட்டி போட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகமாக நடுவண்குற்றப்புலனாய்வுத் துறை, வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது தமிழகத்தில் தான். இதே அரசியல்நெடுந்தொடர் ஆந்திராவிலும் நடக்காது என்பது என்ன நிச்சயம்! அந்த முன் எச்சரிக்கையுடன் சந்திரபாபு நாயுடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கருதுகிறோம்' என்கிறார்கள் அவர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,974.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.