Show all

என்னம்மா! இப்படி சுடறீங்களேம்மா

அசாமில் வானை நோக்கி காவலர் துப்பாக்கியால் சுட்டதில், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து 11 போராட்டக்காரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமின் தின்சுகியா மாவட்டம் பங்கிரீ பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன், மருமகள் ஆகியோரை மர்ம நபர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றனர். கடத்தல்காரர்களிடமிருந்து மகன் மட்டும் தப்பி வந்தார். தந்தையும், மருமகளும் கொல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்து விசாரித்து வந்தனர்.

 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் பலர் நேற்று கத்தி, கம்பு, கற்களுடன் பங்கிரீ காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தின் போது திடீரென வன்முறை வெடித்தது. பொதுமக்களில் சிலர் கற்களைக் கொண்டு காவல்துறையினர் மீது தாக்கினர். கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டனர். அப்போது, தோட்டாக்கள் பட்டதால் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து, போராட்டக்காரர்கள் மீது விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி பலர் தூக்கி வீசப்பட்டனர்.

 

9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், மற்றொருவர் மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.