Show all

சரியும் பொருளாதாரம்- வளரும் ஹிந்துத்துவா மதவாத முன்னெடுப்புகள்! குடியுரிமை சட்டதிருத்தம்: இந்தியாவின் முகம்மாற்ற

குடியுரிமை சட்டதிருத்த முன்வரைவு- மாநிலங்களவையில் இன்று பதிகை செய்யப்படுகிறது. இந்தியப் பொருளாதரம் கிடுகிடு பாதாளத்திற்கு செல்வதைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளாத பாஜக அரசு, வெளிநாடுகளிலிருந்து ஹிந்துக்களை இறக்குமதி செய்யும் முன்னெடுப்புக்கு சட்டம் வரைந்து கொண்டிருக்கிறது.

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று மாநிலங்களவையில் பதிகை செய்யப்பட உள்ள இந்திய குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவு- சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்த சட்டமுன்வரைவின் சில விதிகள் இந்தியாவின் மொத்த தோற்றத்தையே மாற்றி அமைக்கும் என்கிறார்கள். கடந்த ஒரு கிழமையாக இந்தியக் குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவு குறித்து நிறைய பேசப்பட்டு வருகிறது.

இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது, இதனால் இந்தியாவின் தொல்குடி மக்கள் பலர் பெரிய அளவில் சிக்கலுக்கு உள்ளாவார்கள் என்று நிறைய செய்திகள் வெளியாகி வருகிறது. 

இந்திய வரலாற்றில் பதிகை செய்யப்பட முன்வரைவுகளில் மிக மிக முதன்மையான முன்வரைவாக, இது பார்க்கப்படுகிறது. இந்த முன்வரைவில் இன்று செய்யப்படும் மாற்றங்கள், பெரிய அளவில் அரசியல் பிரச்சனைகளை, மாற்றங்களை, சிக்கல்களை இந்தியாவில் ஏற்படுத்த போகிறது. 

அறுபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்ட திருத்தம்தான் இந்த இந்திய குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவு ஆகும்.

அந்தப் பழைய சட்டத்தின் படி, இந்தியாவில் பிறந்தவர்களும், இந்தியாவிற்கு முறையாக அனுமதியோடு வந்து பதினோரு ஆண்டுகள் வாழ்ந்தவர்களும் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும். முறையின்றி இந்தியாவில் குடியேறிய யாரும் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது. 

சரி! அதில் என்ன மாதிரி திருத்தம் மேற்கொண்டு குடியுரிமை சட்டத்திருத்த முன்வரைவை பதிகை செய்ய திட்டமிட்டு இருக்கிறது பாஜக அரசு? 

இந்த சட்டத்திருத்த முன்வரைவு மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அரசு அவர்களை கைது செய்யாது. 

முன்பெல்லாம் இவர்கள் முறையின்றி இந்தியாவில் குடியேறினால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். ஆனால் புதிய சட்டப்படி இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதாவது அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் ஹிந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். 

மேலும் 11 ஆண்டு என்பது குறைக்கப்பட்டு 6 ஆண்டுகளில் இவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். இவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது.

ஆனால் இது இஸ்லாமியர்களுக்கு எப்படி எதிரானது என்று கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. அவர்கள் இந்தியாவில் முறையின்றி நுழைய இதுபோல அனுமதி கிடையாது. இதற்கு முன் எத்தனை ஆண்டுகளுக்கு  முன் இஸ்லாமியர் ஒருவர் இந்தியாவில் நுழைந்து இருந்தாலும் அவர் கைது செய்யப்படுவார் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் . எடுத்துக் காட்டாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்துவும் , இஸ்லாமியரும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் முறையின்றி குடியேறி இருந்தால், அதில் ஹிந்துவுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும். மாறாக இஸ்லாமியர் சிறைக்கு செல்வார் அல்லது நாட்டை விட்டு செல்வார். இதுதான் இந்த சட்டமுன்வரைவு எதிர்க்கப்பட காரணம். 

இந்த சட்ட முன்வரைவு வடகிழக்கு மாநிலங்களில் பெரிய கொதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் நிறைய வெளிநாட்டினர் ஹிந்து என்ற தலைப்பில் முறையின்றி நுழைய வாய்ப்பு இருக்கிறது என்று அப்பகுதி மண்ணின் மக்கள் போராடி வருகிறார்கள். தங்கள் கலாச்சாரம் மொத்தமாக இதனால் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவுக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். 

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவுக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற வகையில்- முஸ்லிம்களோடு, இலங்கைத் தமிழர்களும்  சேர்க்கப்படாத நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய இலங்கைத்தமிழர்களை வெளியேற்ற உடனடி நடவடிக்கை பாயும். 

இந்தப் புதிய சட்டமுன்வரைவின் மூலம் முஸ்லீம் அல்லாத பல லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும். ஆனால் வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறிய பல லட்சம் முஸ்லிம்களும் இலங்கையிலிருந்து தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்கள் பலரும் சிக்கலை சந்திப்பார்கள். 

இந்த சட்டமுன்வரைவு மாநிலங்களவையில் இன்று பதிகை செய்யப்படுகிறது. இந்தியப் பொருளாதரம் கிடுகிடு பாதாளத்திற்கு செல்வதைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளாத பாஜக அரசு வெளிநாடுகளிலிருந்து ஹிந்துக்களை இறக்குமதி செய்யும் முன்னெடுப்புக்கு சட்டம் வரைந்து கொண்டிருக்கிறது பாஜக அரசு. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,361.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.