Show all

ஏன்? நாட்டின் முதன்மை புலனாய்வுக் கழகமாக, பெருமை பீற்றிக் கொள்கிற நடுவண் குற்றப் புலனாய்வுத்துறையிலேயே இலஞ்சம்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொழிலதிபர் மொயின் குரேசி தொடர்பான ஒரு வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது, முதல் தகவல் அறிக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முதன்மை புலனாய்வுக் கழகமாக பெருமை பீற்றிக் கொள்கிற நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை, தங்களது சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதே லஞ்ச வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

அஸ்தானா- தொழிலதிபர் மொயின் குரேசி தொடர்புடைய ஒரு விவகாரத்தில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. குரேசி மீது நிதி மோசடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தரகர் மனோஜ்குமார் கைது செய்யப்பட்டு அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்பட்டதில் அவர் அறங்கூற்;றுவர் முன்னிலையில் அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். அதாவது குரேசி சார்பாக இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவே புகார் எழுந்துள்ளது.

இதற்கு முன்னர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கில் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் அலோக் வர்மா தலையிட்டதாக புகார் பதிவு இருப்பதும் கவனிக்கத்தக்கது.


ஆக நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை மீது லஞ்சப் புகார் எழுவது இது முதல் முறையல்ல. சந்தேசரா சகோதரர்கள் தொடர்பான வழக்கிலும் அஸ்தானா பெயர் அடிபட்டது. வதோதரா தொழிலதிபர்களான சந்தேசரா சகோதரர்கள் தற்போது அயல்நாட்டில் உள்ளனர். இவர்கள் மீது ரூ.5200 கோடி கடன் மோசடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுமதிகள் கடுமையாக்கப் படும் போது, அனுமதி தருகிற அமைப்பு அதிகார மையம் ஆகிறது. அதிகார மையம் காசு வாங்கிக் கொண்டு, மிகச் சிலருக்கு அனுமதிகளை எளிமையாக்குவதுதான் இலஞ்சம். 

இலஞ்சத்தை அப்புறப் படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி எல்லா அனுமதிகளையும் எளிமையாக்குவதுதான். எல்லோரும் அறிந்த இலஞ்சத்தை ஆய்வு செய்து பார்ப்போமே! மின் இணைப்பு வாங்குவதற்கும், குடிநீர் இணைப்பு வாங்குவதற்கும் இலஞ்சம் கொடுத்த அனுபவம் சொந்த வீடு வைத்திருக்கிற அனைவருக்கும் இருக்கும். 

இந்த இரண்டில் இலஞ்சம் ஏன் வருகிறது. மின் பற்றாக்குறை, குடிநீர்ப் பற்றாக்குறை. இந்த இரண்டிலும் தன்னிறைவு அடைந்தால், அந்த அனுமதி மையத்தில் இருப்பவர்கள் இந்த இணைப்புகளை தேடித் தேடிக் கொடுக்க வேண்டிய பணியாளர்களாகவே இருப்பார்கள். மாறாக பற்றக்குறையான ஒன்றை நிருவாகப் படுத்துகிறவர் அதிகாரி ஆகி விடுகிறார். அவர் இலஞ்சத்தை நிர்பந்திக்க  முடிகிறது. 

அந்த இடங்களில் இலஞ்சத்;தை ஒழிப்பதற்கு, பற்றாக் குறையை,  தன்னிறைவு ஆக்க முயலாமல், அந்த அதிகாரிகளுக்கு மேல், இன்னொரு அதிகார மையத்தை உருவாக்கி இலஞ்சத்தை வலிமைப் படுத்திக் கொண்டேயிருக்கிறோம். இலஞ்சத்தை ஒழிக்க மேலும் மேலும் அதிகார மையங்கள்! என்று நாம் மூளைச்சலவை செய்யப் பட்டிருக்கிறோம். கட்சிகள், ஊடகங்கள், அறிஞர்கள் எல்லாம் அதையே முன் வைக்கிறார்கள். 
அவர்களுக்கெல்லாம்: சம்பளத்திற்கு கேடாக, அதிகார மையங்களை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போவது தவறு என்கிற பாடந்தான் இந்த நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர்களின் மீதான இலஞ்சப் புகார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,947.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.