Show all

என்னதான் நடக்கிறது டெல்லியில்

டெல்லி ஜசோலா நகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அதை சரி செய்யுமாறும் கூறி கடந்த 10-ந் தேதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கானுக்கு பேசியில் முயன்றுள்ளார். அவருக்கு சரியான பதில் கிடைக்காததால் பின்னர், ஜாமியா நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேரடியாக சென்றார். அவரால் சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் வீடு திரும்ப முயன்றபோது சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் இருந்து வெளியே வந்த இளைஞர் ஒருவர், மின்தடை பிரச்சினையை அரசியல் ஆக்காமல் இத்துடன் விட்டுவிடு இல்லை என்றால் உன்னை கற்பழித்து காரை ஏற்றி கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் ஜாமியா நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் அந்த பெண், நீதிபதி ஒருவர் முன்பாக தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்தார். அதில் வீடு திரும்பியபோது, தன்னை காரை ஏற்றிக் கொல்லும் நோக்கத்துடன் ஒருவர் காரை ஓட்டி வந்தார் எனவும், அந்த காரில் அமானத்துல்லா கான் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கற்பழித்து விடுவதாக அச்சுறுத்துதல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று அமானத்துல்லா கானை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஜாமியா நகர் காவல்துறையினர் அவரை பிணையில் வெளிவரமுடியாத வகையில் கைது செய்தனர். இதுபற்றி அவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட பெண் எனது வீட்டுக்கு வந்ததே தெரியாது. பா.ஜனதாவினர் தூண்டுதலின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றார். தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு கண்டனம் தெரிவித்த, முதல் அமைச்சர் கெஜ்ரிவால், பிரதமர் மோடி மேலும் ஒரு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்துள்ளார் என்று சுட்டுரையில் கேலியாக குறிப்பிட்டார். இன்னொரு சுட்டுரை பதிவில் அவர், குஜராத்தில் ஆனந்தி பென் அரசு தலித்துகளையும், படேல் இனத்தவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறது. மோடி அரசு டெல்லிவாசிகள் மீது போலி வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. இதற்காக குஜராத், டெல்லி மக்கள் இணைந்து போராட வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.