Show all

இணையதளங்களைப் பயன்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது

நகர்ப்புறங்களில் இணையதளங்களைப் பயன்படுத்துவோர் தொடர்பான பட்டியலில், நாட்டிலேயே தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது. தில்லி, மகாராஷ்டிரம் ஆகியவை 2வது இடத்தில் உள்ளன. நாடு முழுவதும் 34.2 கோடி பேர் இணையதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில், நகர்ப்புறங்களில் 23.1 கோடி பேரும் கிராமப்புறங்களில் 11.2 கோடி பேரும் உள்ளனர். நகர்ப்புறங்களில் இணையதளங்களைப் பயன்படுத்துவோரில், தமிழகத்தில் மட்டும் 2.1 கோடி பேர் உள்ளனர். அதாவது, நாட்டில் மொத்தமுள்ள நகர்ப்புற இணையதளப் பயன்பாட்டாளர்கள் விழுக்;காட்டில் தமிழகத்தில் மட்டும் 9 விழுக்காட்டு பேர் உள்ளனர். அதை தொடர்ந்து தில்லி, மகாராஷ்டிரத்தில் முறையே 1.96 கோடி பேரும் 1.97 கோடி பேரும் இணையதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டிலேயே அதிகமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில்தான் கிராமப்புறங்களில் அதிக அளவு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மட்டும் கிராமப்புறங்களில் 1.12 கோடி பேர் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் கிராமப்புறங்களில் சுமார் 97 லட்சம் பேரும், ஆந்திரத்தில் சுமார் 90 லட்சம் பேரும் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இணையதளச் சேவையை அதிகரிக்கும் நோக்கில், 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை ஆப்டிகல் ஃபைபர் கம்பி மூலம் இணைக்க நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பாரத் நெட் என்ற பெயரில் புதிய திட்டத்தை வகுத்துள்ள நடுவண் அரசு, அந்தத் திட்டத்தை 3 கட்டங்களாக செயல்படுத்தவும் உள்ளது. இதில் முதல்கட்டமாக, 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை வரும் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், 2-ஆவது கட்டமாக 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள்ளும், 3-ஆவது கட்டமாக மாவட்டங்கள், வாரியங்கள் ஆகியவைகளை 2023-ஆம் ஆண்டுக்குள்ளும் இணைக்க நடுவண் அரசு முடிவு செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.