Show all

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம்: அருண்ஜெட்லி

வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம் என்று நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்து உள்ளார்.

 

நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜப்பானில் இருந்து முதலீடுகளைக் கவருவதற்காக அந்த நாட்டுக்கு 6 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஒசாகா நகரில் இருந்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில்,

பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் நல்ல லாபம் சம்பாதித்துள்ளன. இந்த வங்கிகளின் இருப்புச்சீட்டுகளைப் பாருங்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்முறை வடிவில் நல்ல லாபம் கண்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி நல்ல லாபம் பெற்றுள்ளது.

 

வங்கிகளை அரசு பலப்படுத்தும் என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் வங்கிகளுக்கு அரசின் முழுமையான ஆதரவு உண்டு. நான் பட்ஜெட்டில் ஒரு தெளிவான தொகையை குறிப்பிட்டுள்ளேன். ஆனால் தேவை ஏற்படும்பட்சத்தில் ஒரு பெரிய தொகையை அறிவிக்க விரும்புகிறேன்.

திவால் சட்டம், வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கும். அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் மறுசீரமைப்பு வழிமுறைகளும் அடக்கம். வாராக்கடன்கள் எல்லாமே வங்கி மோசடிகள் அல்ல. சில கடன்கள் சரியற்றவையாக இருக்கக்கூடும். ஆனால் அதில் பெரும்பகுதி தொழில் நஷ்டங்களால் ஏற்பட்டவை. சில குறிப்பிட்ட துறைகளில் இழப்பும் ஏற்பட்டுள்ளன. உச்சகட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்ட உடன், தொழில் நிறுவனங்களில் நஷ்டம் லாபமாக மாறுகிறபோது, நிலைமையில் மாற்றத்தை காண முடியும்.

 

கடந்த ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.12 ஆயிரம் கோடியை செயல்முறை வடிவிலான லாபமாக சம்பாதித்துள்ளது. ஆனால் அது வாராக்கடன்கள் காரணமாக நஷ்டம் காட்டி இருக்கிறது. இந்த வாராக்கடன்கள் எல்லாம் இப்போது தந்தது அல்ல. பழையவை. துறைகள் நலிவுற்று இருந்தபோது கொடுத்தது. அந்தப் பிரச்னைகள் ஏற்ற விதத்தில் சரி செய்யப்பட்டுள்ளன.

 

வங்கிகளுக்கு பெருமளவில் முதலீட்டு ஆதரவினை வழங்குவோம். அதே நேரத்தில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாதவர்கள், வங்கிகளை கவலைப்பட வைத்து விட்டு, அவர்கள் நிம்மதியாக தூங்கவிட முடியாது என்று கூறி உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.