Show all

பாமக மாநாட்டுக்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு

சென்னை வண்டலூர் ஊரப்பாக்கம் விஜிபி மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறும் பாமக மாநாட்டுக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், காவல்துறையின் நிபந்தனைகளை பாமக சரியாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

‘வரும் 27-ம் தேதி வண்டலூரில் பாமக சார்பில் மாநில மாநாடு நடத்த உள்ளனர். மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வன்னியர் சங்கம் சார்பில் நடந்த சித்திரைத் திருவிழாவில் வன்முறை வெடித்து பல கோடி ரூபாய் அளவுக்கு பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது. இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது. விரைவில் தேர்தல் வரவுள்ளதால் பாமக சார்பில் மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது. இதனால் தலித் மக்களுக்கு எதிராக பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, மனுதாரர் இந்த மாநாடு மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அவ்வாறு பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன்தான் இந்த மாநாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

காவல்துறையினரும் சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்ய வேண்டும். காவல்துறையினரின் நிபந்தனைகளை பாமகவினர் சரியாக பின்பற்ற வேண்டும்.

மீறி ஏதாவது பிரச்சினை அல்லது சேதம் ஏற்படுத்தப்பட்டால் அதற்கு கட்சியின் இணைப் பொதுச் செயலாளரான ஆறுமுகம்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறி தடைவிதிக்க மறுத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.