Show all

அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுபட்டு விட்டேன். நான் தீவிரவாதி அல்ல: சஞ்சய் தத்

‘‘அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுபட்டு விட்டேன். நான் தீவிரவாதி அல்ல’’ என்று சிறையில் இருந்து விடுதலை ஆன நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின்போது, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

 

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது.

 

ஏற்கனவே சிறையில் 1½ ஆண்டை கழித்த நிலையில், எஞ்சிய 3½ ஆண்டுகள் சிறை தண்டனைக்காக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சஞ்சய் தத் மீண்டும் சரண் அடைந்தார். இதனையடுத்து அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்தநிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று மராட்டிய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று காலை 8.45 மணிக்கு சிறையில் இருந்து 56 வயது சஞ்சய் தத் வெளியே வந்தார்.

 

வெளியே வந்ததும் சஞ்சய் தத் கீழே குனிந்து தரையை தொட்டு வணங்கினார். மேலும், சிறை வளாகத்தில் பறந்து கொண்டிருந்த தேசிய கொடியை நோக்கி ‘சல்யூட்’ அடித்தார்.

சஞ்சய்தத்தை வரவேற்க அவரது மனைவி மான்யதா உள்பட குடும்பத்தினரும், ரசிகர்களும் எரவாடா சிறை முன்பு கூடியிருந்தனர். இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியும் சஞ்சய் தத்தை வரவேற்க சிறை வாசலுக்கு வந்து நின்றார். இந்தநிலையில், சிறை வளாகத்தில் இருந்து வெளியே வந்த சஞ்சய் தத், தன்னுடைய ரசிகர்களை பார்த்து முகமலர்ச்சியுடன் கையசைத்தார்.

 

பின்னர், அங்கு கூடியிருந்த காவல்துறையினர், அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி புனே விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதைத்தொடர்ந்து, தனி விமானம் மூலம் சஞ்சய் தத் மும்பை புறப்பட்டு சென்றார்.

 

சஞ்சய் தத் வந்த விமானம் மும்பை சாந்தாகுருஸ் உள்நாட்டு விமான நிலையத்தை வந்தடைந்ததும், அவர் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்தார். பின்னர், காரில் பிரபாதேவியில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

 

அதன்பின்னர், பாந்திரா பாலி ஹில் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சஞ்சய் தத் காரில் அழைத்து வரப்பட்டார். சஞ்சய் தத் விடுதலையையொட்டி, அவரது வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.