Show all

விசாரிக்காமலே காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்: குடும்பத்தினர்

மும்பையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி 2 இளைஞர்களைப் போலீசார் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள பாந்த்ரா காவல் நிலைய பகுதியில் வௌ;ளிகிழமை இரவு ஆசிப் ஷேக், தானிஷ் ஷேக் ஆகிய 19 வயது வாலிபர்கள் இரண்டு பேர் சாலையில் குடிபோதையில் விழுந்து கிடந்த இரண்டு பேருக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் வாலிபர்கள் இரண்டு பேரையும் அழைத்து வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர். அவர்கள் பெயர்களை கேட்டதும் அந்தப் போலீசார் இவர்கள் இருவரும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையவர்களாக இருக்கலாம் என கருதினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாலிபர்கள் கூறுகையில், எங்கள் பெயர்களைக் கேட்டதும் போலீசார் நாங்கள் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்களா என்று கேட்டனர். எங்களை கொடூரமாக அடித்து, உதைத்து பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று கூறினர். எங்களது பெற்றோருக்கு போனில் தகவல் சொல்வதற்கு கூட அனுமதிக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து வாலிபர்களின் குடும்பத்தினர் கூறுகையில், பசங்க உடம்பில் போலீசார் அடித்த காயங்களின் தடிப்பு நன்றாக தெரிகிறது. என்ன, ஏது என்று விசாரிக்காமலே இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டினர். இதுகுறித்து சம்பந்தபட்ட காவல் நிலைய தரப்பில் எதுவும் விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர். இருந்த போதிலும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் வாலிபர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனர் அகமது ஜாவேத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மும்பைவாசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.