Show all

வைகோ கடும் தாக்கு! விதவிதமாக ஆடை உடுத்துவது, அன்றாடம் ஒரு நாட்டிற்கு போவது என 2போதைகள் மோடியை ஆட்டிப் படைக்கின்றன

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விதவிதமாக ஆடை உடுத்துவது, அன்றாடம் ஒரு நாட்டிற்கு போவது என்று 2 போதைகள் மோடியை ஆட்டிப் படைக்கின்றன என்று வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலக்கிய விழா ஒன்று சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கவிஞர் ரமணனுக்கு, எழுத்தாளர் சிவசங்கரி வழங்கும் இலக்கியப்பீடம்-சிவசங்கரி விருது மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழி ஆகியவற்றை வழங்கினார்.

விழா முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: லட்சக்கணக்கான உழவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். 4 மாதமாக மழை, வெயில், பனி என்று பார்க்காமல், தெருவிலேயே கிடந்தார்கள். ஆனால் அவர்களை பார்க்க 5 நிமிடம்கூட ஒதுக்காத பொறுப்பற்ற ஒரு தலைமை அமைச்சர் பதவியில் இருப்பது இந்த நாட்டுக்கு சாபக்கேடு. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க தமிழ்நாட்டுக்கு வரவில்லை.

விதவிதமாக ஆடை உடுத்துவது, அன்றாடம் ஒரு நாட்டிற்கு போவது என்று 2 போதைகள் மோடிக்கு உள்ளன. இதில் இருந்து அவர் ஒரு காலமும் வெளியில் வரமுடியாது. அவரிடம் இருந்து பதவியையும், அதிகாரத்தையும் மக்கள் பறிக்க வேண்டும்.

நம்ம கிராமங்களில், இதுபோன்று விதவிதமான ஆடையுடுத்தி, அப்பன் சம்பாதித்த காசில், (இந்திய மக்களின் வரிப் பணம்) பொறுப்பில்லாமல், கண்டபடி ஊரைச் சுற்றும் இளைஞர்களை: 

'மைனர் ஜாலி

மணிபர்ஸ் காலி

கையிலே பேட்டரி 

கஞ்சிக்கு லாட்டரி' 

என்று கிராம மக்கள் கிண்டலடிப்பார்கள். அந்தளவிற்கு மோடி மீது கோபமாகி விட்டாரே வைகோ!

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.