Show all

சாலையோர மரத்தடியில் ஐம்பொன் அம்மன் சிலை

ஆம்பூர் அருகே சாலையோர மரத்தடியில் ஐம்பொன் அம்மன் சிலை இருந்தது. இதுகுறித்து வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு மரத்தடியில் அம்மன் சிலை ஒன்று இருந்தது. அந்த வழியே சென்றவர்கள் அம்மன் சிலையைப் பார்த்து உடனடியாக தாசில்தார் ரூபிபாய், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே மரத்தடியில் உள்ள சிலை ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை என அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலையை பார்வையிட்டு சென்றனர். இதனிடையே வட்டாட்சியர், வருவாய்த்துறையினர் மற்றும் ஆம்பூர் வட்டார காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த அம்மன் சிலையை மீட்டு, வட்டாட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அந்த அம்மன் சிலை 1980ல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. சிலை எப்படி இங்கு வந்தது என்று தெரியவில்லை. அம்மன் சிலை ஐம்பொன் சிலையாகத்தான் இருக்கலாம் என வருவாய்த்துறையினர் சந்தேகித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் சிலை ஆம்பூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஐம்பொன் அம்மன் சிலையை மர்மநபர்கள் கடத்தி வந்து இருக்கலாம் எனவும், பயந்து போன மர்ம கும்பல் அந்த சிலையை சாலையோரம் மரத்தடியில் விட்டு சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.