Show all

நாடு முழுவதும் உள்ள 609 அமைச்சர்களில் 210 பேர் மீது குற்றவியல் வழக்குகள் பகீர் தகவல்

நாடு முழுவதும் உள்ள மாநில அமைச்சரவைகளில் இடம்பெற்றுள்ள 609 அமைச்சர்களில் 210 பேர் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு’ என்ற தன்னார்வ நிறுவனமும், சிந்தனையாளர் கூட்டமைப்பு என்ற நிறுவனமும் இணைந்து மாநில அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் உள்ள 29 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் பதவியில் உள்ள 620 அமைச்சர்களில் 609 பேரின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 34 விழுக்காடு அதாவது 210 அமைச்சர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இதில் 113 அமைச்சர்கள் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. குற்றவியல் வழக்குகள் அதிகம் உள்ள அமைச்சர்கள் என்ற பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 18 அமைச்சர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக 12 அமைச்சர்கள் மீது வழக்குகளுடன் பீகாரும், இதற்கு அடுத்து, தெலங்கானாவில் 9 பேர் மீதும் வழக்குகள் உள்ளன. மேலும் இது போன்ற குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு 9.52 கோடி. வழக்குகளில் சிக்காதவர்களின் சொத்து மதிப்பு ரூ.8.10 கோடி. அமைச்சர்களில் 462 பேருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.59 கோடி. கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்துள்ள அமைச்சர்களில் ஆந்திராவின் ஆளும் கட்சியான தெலுங்குதேச கட்சி அமைச்சர் பொன்குரு நாராயணா ரூ.496 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் முதல்வர் சித்தராமைய்யா அவையில் உள்ள டி.கே.சிவகுமார் ரூ.251 கோடி சொத்துகளை வைத்துள்ளார். கோடிகளை குவித்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் ஆந்திராவுக்கு முதல் இடம். இங்கு 20 அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு மட்டும் ரூ.45.49கோடி. கர்நாடகாவில் கோடிகளை குவித்துள்ள 31 அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.36.96 கோடி. அருணாச்சல பிரதேசத்தில் 7 அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.32.62 கோடி. மிகவும் குறைவான சொத்துகளை கொண்ட அமைச்சர்களை பெற்றிருக்கும் மாநிலமாக திரிபுரா உள்ளது. 12 அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு வெறும் ரூ.31.67 லட்சம் மட்டுமே. அருணாச்சல பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கோடிக்கணக்கான சொத்துகளை கொண்டவர்கள் ஆவர். கர்நாடகாவில் இது 97 சதவீதம். அமைச்சர்களில் 51 பேர் பெண்கள். அதிக பெண்களை அமைச்சர்களாக கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.