Show all

எல்லையற்ற வரி விதிக்கும் அதிகாரம் அரசிடம் இருப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை: ராகுல் காந்தி

தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின்போது, ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்று நடுவண் அரசு விரும்புகிறது. அதில் தீவிரமாகவும் உள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டு, மேலவையில் நிறைவேற்றுவதற்காக காத்திருக்கிற இந்த மசோதாவில், 3 முக்கிய அம்சங்களில் மாற்றம் கேட்டு, காங்கிரஸ் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் இந்த மசோதா விவகாரம் பற்றி,

ஜி.எஸ்.டி. மசோதாவை முதலில் கொண்டு வந்தது நாங்கள்தான். அப்போது பாரதீய ஜனதாவும், தற்போதைய நிதி மந்திரி அருண் ஜெட்லியும் ஆவேசமாக எதிர்த்தனர்.

மற்றொரு புறம், நாங்கள் எப்போதுமே ஜி.எஸ்.டி. மசோதாவை ஆதரிக்கிறோம். இது கொஞ்சம்தான் சிக்கலானது, சிவப்பு நாடா முறையினை (காலதாமதங்களை) குறைக்கிறது. சரக்குகள் நகர்வதற்கு அனுமதிக்கிறது. இதனால் இந்த மசோதா முக்கியத்தவம் பெறுகிறது.

இந்த மசோதாவை பொறுத்தமட்டில், அதன் தற்போதைய வடிவத்தில் காங்கிரஸ் கட்சி 3 அம்சங்களில் மாறுபடுகிறது.

நடுவண், மாநில அரசுகள் இடையே ஜி.எஸ்.டி. வரி வருவாய் பகிர்வில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமான வழிமுறை ஏற்படுத்த வேண்டும்; வரி விதிப்பில் அதிகபட்ச வரி கூடாது.

மாநிலங்கள் கூடுதலாக ஒரு சதவீத வரி விதிக்கலாம் என்ற நிலைப்பாட்டையும் காங்கிரஸ் எதிர்க்கிறது.

காங்கிரஸ் கட்சி, ஏழை எளியவர்களின் பிரதிநிதியாக உள்ளது. எல்லையற்ற வரி விதிக்கும் அதிகாரம் அரசிடம் இருப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. சாமானிய மக்கள் மீது வரிச்சுமை கூடாது.

இந்த வேறுபாடுகள் களையப்பட்டு விட்டால், ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற, ஆதரிக்கத் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.