Show all

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் என்மேல் பாயும் தோட்டா

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘என்மேல் பாயும் தோட்டா’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

 

இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளராகவும் சில படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது ஒன்றாக எண்டெர்டெய்ன்மெண்ட் என்ற தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் புது நிகழ்ச்சி ஒன்றில் தோன்றவுள்ளார்.

 

‘க்ரீன் டீ வித் கௌதம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல் 2 பகுதிகளில், தனுஷ் மற்றும் அனுஷ்கா ஆகியோரை அவர் பேட்டி கண்டுள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு பேட்டி பதிவேற்றப்படும் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

 

‘க்ரீன் டீ வித் கௌதம்’ நிகழ்ச்சியில் தனுஷைப் பேட்டி கண்ட போது, தனுஷிடம் கதை ஒன்றைத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கௌதம் மேனன்.

அக்கதை தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்தாகவும், உடனடியாக செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

 

இப்படத்துக்கு ‘என்மேல் பாயும் தோட்டா’ என்று கௌதம் மேனன் பெயரிட திட்டமிட்டு இருப்பதாகவும், மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது. 2 மாதத்தில் மொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது, அதற்கு தனுஷும் சம்மதம் தெரிவித்து தொடர்ச்சியாக 2 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறார். இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடைபெறும் போராட்ட களத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கௌதம் மேனன்.

 

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற தலைப்பில் சூர்யாவுடன் பணியாற்ற இருந்த படத்தைத் தான் கௌதம் மேனன், தனுஷை வைத்து ‘என்மேல் பாயும் தோட்டா’ என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கௌதம் மேனனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

 

தனுஷ் படத்தை முடித்துவிட்டு, ஜெயம் ரவி படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் கௌதம் மேனன். தற்போது கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் தயாராகிவருகிறது. மேலும், செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திகில் படம் ஒன்றையும் கௌதம் மேனன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.