Show all

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவிபுரிய முன்வருவோரை பாதுகாக்க

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவி புரிய முன்வருவோரை பாதுகாக்க நடுவண் அரசு கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நபர்களுக்கு உதவி புரிபவரை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துவதும், வழக்கு பதிவு செய்து அலைக்கழிப்பதும் தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

 

இது தொடர்பாக கடந்த 2014-ல் உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, சாலை பாது காப்புக்காக நடுவண், மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. மேலும் விபத்துப் பகுதிகளைக் கண்டறியவும், விபத்துகளில் சிக்கியவர்களை

காப்பாற்ற முன்வருவோரை பாதுகாக்கவும் தேவையான வழிமுறைகளை வகுக்கும்படி நடுவண் அரசுக்கும், கண்காணிப்பு குழுவுக்கும் உத்தர விட்டிருந்தது.

 

இதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய கண்காணிப்பு குழு, மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில்களை அமைக்க வேண்டும், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முன்வருபவர்கள் காவல்துறையினரின் தொல்லையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சங்களை உச்ச நீதிமன்றத்திடம் பரிந்துரைத்திருந்தது.

 

இந்தப் பரிந்துரையை ஏற்று சாலை விபத்தில் சிக்குவோரைக் காப்பாற்ற முன் வரும் நபர்களை காவல்துறையினரோ அல்லது பிற அரசு அதிகாரிகளோ துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடப் போவதாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் நீதிபதிகள் வி.கோபால கவுடா மற்றும் அருண் மிஸ்ரா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவுவோரைப் பாதுகாக்க நடுவண் அரசு கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை ஆராய்ந்த நீதிபதிகள் இந்த நெறிமுறை களுக்கு ஒப்புதல் அளித்ததுடன், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடுவண் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.