Show all

வரிச்சுமையை பொருத்தவரை சிகரெட் பீடி மீதான பங்களிப்பு சமீபகாலமாக குறைந்து வருகிறது

அத்தியாவசிய உணவு பொருட்களை விட புகையிலை தயாரிப்புகளின் விலை மலிவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்துள்ளது.  புகையிலைப் பொருட்கள் குறித்து சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது.  தொழில்துறை மேம்பாடு மற்றும் சுகாதாரம் பற்றி இதில் விவரங்கள் திரட்டப்பட்டன. கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 2013ம் ஆண்டு வரை இந்த  ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: 

புகையிலைப் பொருட்களின் விலை காலத்துக்கேற்ப அதிகரிக்கப்படவில்லை. இதனால் அத்தியாவசிய  உணவு பொருட்களை விடவும் இவை மலிவாக இருக்கின்றன. குறிப்பாக சிகரெட்டுகள், பீடி மட்டுமின்றி புகைக்கப்படாத புகையிலை  தயாரிப்புகளான ஜர்தா, கிமாம், சுர்தி, பான் மசாலா, மெல்லும் புகையிலை ஆகியவை பற்றி ஆய்வு செய்யப்பட்டன.

 

இதில், அத்தியாவசிய பொருட்களின் விலையை விடவும் மேற்கண்ட புகையிலை தயாரிப்புகள் விலை மலிவாக இருக்கின்றன. இந்தப் பயன்பாட்டை ஒழிக்க வேண்டுமென்றால் இதன் மீதான வரி விலக்குகள் நீக்கப்பட வேண்டும். அதிலும், பீடி போன்றவற்றுக்கு வரி விலக்குகள்  அளிக்கப்படுவது இந்த பயன்பாட்டை அதிகரிக்கவே செய்யும் என கூறப்பட்டுள்ளது.

‘இந்தியாவில் புகையிலை மீதான வரிவிதிப்பு’

என்ற  தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பொருட்களுக்கான வரி விதிப்பு என்பது அரசுக்கு வருவாய்  பெருகுவதோடு, மக்களின் உடல் நலத்துக்கும் சாதகமாக இருக்க வேண்டும்.

 

எனவே காலத்துக்கேற்ப வரி விதிப்பு செய்வது புகையிலை பயன்பாட்டை குறைக்க உதவும். அதிலும், இளைய சமுதாயத்தினர் இந்தப்  பழக்கத்தில் இருந்து விடுபட வழி வகுக்கும். அதோடு அரசுக்கும் வருவாய் ஈட்டித்தரும். புகையிலை தயாரிப்புகள் மலிவாக கிடைப்பதால்  ஏழைகள் கூட எளிதாக வாங்க முடிகிறது. தற்போதுள்ள மதிப்பு கூட்டு வரி, கலால் வரி போன்றவை புகையிலை பொருட்கள்  விலையேற்றத்துக்கு போதுமானதல்ல. ஏனென்றால் இவை இன்னும் எல்லோரும் வாங்கக்கூடிய விலையில்தான் உள்ளன.

 

வரிச்சுமையை பொருத்தவரை சிகரெட் பீடி மீதான பங்களிப்பு சமீபகாலமாக குறைந்து வருகிறது. சிகரெட் மீதான வரிச்சுமை பங்களிப்பு 2008ல்  55.3 சதவீதமாக இருந்தது 2013ல் 36.8 சதவீதமாகவும், பீடியின் மீது 2011ல் 7.2 சதவீதமாக இருந்தது 2013ல் 5.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது என  இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 

     புகையிலை பொருட்கள் மீதான வரிச்சுமை குறைந்திருக்கிறது.

     மலிவாக இருப்பதால் ஏழைகளும் எளிதாக வாங்குகின்றனர்.

     பீடி போன்றவை மீது வரிச்சலுகை திரும்பப்பெற வேண்டும்.

     மக்கள் நலன் காக்கும் வகையில் வரி விதிப்பு தேவை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.