Show all

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையே தன்னிச்சையாக விசாரிக்கும்! உச்சஅறங்கூற்றுமன்றம்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வலியுறுத்தி, பொதுமக்கள் மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தினர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர். பல பகுதிகளிலும் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இதுதொடர்பாக மாநில சிறப்பு புலனாய்வுக் காவல்துறை விசாரித்தால், நியாயமாக இருக்காது என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணை முடிவில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்க உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 

இதையடுத்து நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை தனிப்படை அமைத்து, தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றது. அதேநேரம் துப்பாக்கி சுட்10டுக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த நிலையில்தான் தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர், அர்ஜுனன் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையிடம் துப்பாக்கி சூடு தொடர்பாக புகார் அளித்தார். 

அதையேற்று, புதிதாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்தது. 7 பிரிவுகளில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்தது. கூட்டுச்சதி, ஒரே திட்டத்தின் அடிப்படையில் கூட்டாக செயல்படுதல், வழிப்பறி, கொள்ளை, கொலை வெறி தாக்குதல், பிறருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசு ஊழியர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுதல், தவறான ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. 

இதையடுத்து, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை தேவையில்லை என்று கூறி தமிழக அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணை நடத்திய உச்சஅறங்கூற்றுமன்றம் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை தொடர்ந்து தன்னிச்சையாக விசாரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது ஸ்டெர்லைட் குறித்து இன்றைக்கே வழங்கப் படுகிற இரண்டாவது தீர்ப்பாகும். முன்னது ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை. அந்த தீர்ப்பு நூறு விழுக்காடும் கொண்டாடத் தக்கது. இந்த இரண்டாவது தீர்ப்பு அப்படி நூறு விழுக்காடும் கொண்டாடத் தக்கதாக கொள்ள முடியாது. 

தற்போதைக்கு நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை மோடி அரசின் கைப்பாவையாகச் செயல் படுவதான கருத்து புகையை கிளப்பி வருகிறது. இந்த நடுவண் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உறுதிப் படுத்தப் பட்டிருக்கிற துப்பாக்கிச் சூடு குறித்தான விசாரணை தேர்தல் சமயத்தில் அதிமுக அரசை கூட்டணிக்கு நெருக்குவதற்கு மட்டும் பயன்பட்டுப் போய் அப்புறம் பிசுபிசுக்கலாமோ என்கிற அச்சம் மக்களுக்கு இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,067.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.