Show all

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை! திருமாவளவன்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை, என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமித் ஷா கைது செய்யப்பட்டார். அச்சம்பவத்துக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பழித்தீர்ப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தலைமைஅமைச்சர் மோடியும் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை அமலாக்கத்துறைகளை ஏவி இந்த பழிவாங்கும் நடவடிக்கையை நடத்தியுள்ளார்கள். சிதம்பரம் ஓடி ஒளிந்துவிட்டார், தலைமறைவாகிவிட்டார் என திட்டமிட்டு நடுவண் அரசு வதந்தியைப் பரப்பியது. ஆனால், அவர் ஏற்கெனவே நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைக்கு அணியமாகியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். ஊடக விவகாரத்தில் முன்பிணை பெறுவதற்காக அவசர வழக்காக எடுக்கக்கோரி சட்டஅடிப்படையாக மனு பதிகை செய்திருந்தார் அவர். ஆனால், அவரது வழக்கை விசாரிப்பதாகச் சொன்ன அறங்கூற்றுவர் நேற்று மாலை 4 மணிக்கு மேல் காணாமல் போய்விட்டார். இதிலிருந்து உச்ச அறங்கூற்றுமன்றத்தையும் இன்று உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது என்பதை உணர முடிகிறது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து முன்பிணை வழங்கி சட்டஅடிப்படை நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் உறுதியாக விசாரணைக்கு தானே முன்வந்து சிதம்பரம் ஒத்துழைப்பு அளித்திருப்பார்.

சிதம்பரம் வீட்டில்தான் உள்ளார் எனத் தெரிந்த பிறகு வீட்டை முற்றுகையிட்டாலே போதுமானது. எந்த நேரத்திலும் அவர் வெளியேற முடியாது. காத்திருந்து அவரைக் கைது செய்திருக்கலாம். ஆனால், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து அவரைக் கைது செய்வதற்கு என்ன தேவை வந்தது எனத் தெரியவில்லை. இதுவரை குற்றஆவணம் பதிகை செய்யப்படவில்லை. குற்றஆவணத்தில் அவர் பெயர் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்களும் இல்லை. ஆகவே, அவர் அநாகரிகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிதான். இது மக்களாட்சி தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். பாஜக அரசு எந்த மரபுகளையும் பின்பற்றத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் சட்டமுன்வரைவுகளை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்திலும், தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்ட அணுகுமுறையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் எதேச்சதிகாரப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ஆனால், சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என மறுப்பு தெரிவிப்பதிருப்பது வேடிக்கையானது.

காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் இந்தக் கைது நடவடிக்கை. காங்கிரஸ் முன்னணி தலைவர்களுள் தொடர்ந்து மோடி அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தவர்களில் சிதம்பரமும் ஒருவர். குறிப்பாக பணமதிப்பிழப்பு, சரக்கு-சேவைவரி போன்ற நடவடிக்கைகளை, இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது என்பதை அவர் தொடர்ச்சியாக நாளேடுகளில், கட்டுரைகளில் வெளியிட்டார். மோடி அரசின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார். விஜய் மல்லையா மற்றும் இன்னும் பல குற்றவியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு அவர்களைத் தேடுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காதவர்கள், கைது செய்ய எந்த முனைப்பும் காட்டாதவர்கள் சிதம்பரம் கைதில் மட்டும் இவ்வளவு அவசரம் காட்டியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டினார்.

தமிழகப்பாணியில், நடுவண் அரசிலும் இரண்டு கட்சிகளின் கடுமையான மோதல் முன்னெடுக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றே சொல்லலாம். இராகுல் தவிர்த்து காங்கிரஸ் கட்சியினர் வெறுமனே அறிக்கை அரசியல் நடத்தி வந்த நிலையில், பாஜகவின் இந்த பழிவாங்கும் முயற்சி, காங்கிரசின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நல்ல தூண்டுகோலாகவே அமையும் என்றே நம்பலாம். 
 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,253.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.