Show all

செம்மரம் கடத்தி விற்க, அவர்களே வெட்டினார்களாம்! 12 தமிழர்களுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ஆந்திரா அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டப்படுவதாக ஆந்திர வனத்துறையினருக்கு கமுக்கத் தகவல் கிடைத்ததாகவும், இதையடுத்து, வன அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதாகவும், அப்போது அங்கு செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

வெட்டியவர்கள்தான் கடத்தல்காரர்களா? அப்படியானால் கடத்தல்காரார்களே நேரடியாக காட்டுக்கு வந்து, செம்மரங்களை வெட்டி, அவர்களே சுமந்து சென்று, அல்லது வாடகை வண்டி ஏற்பாடு செய்து சந்தையில் சென்று விற்றார்கள் என்றால் கமுக்கம் எங்கேயிருக்கிறது இங்கே? என்பதெல்லாம் யாருக்கும் தெரிய வில்லை.  

கைது செய்யப்பட்ட தமிழர்களிடம் இருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்கள் மற்றும் 4 வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டனவாம். அந்த வாகனங்கள் எந்தெந்த தமிழர் பேரில் உள்ளது என்றும் தெரியவில்லை. ஆக இந்தத் தமிழர்கள் சொந்தமாக வாகனம் வாங்கி கடத்தல் தொழில் செய்கிறார்களா? என்பதும் தெரியவில்லை.

கைதானவர்கள், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரியை சேர்ந்த அப்பாவித் தொழிலாளிகள் என்று  தெரியவந்தது. பின்னர் அவர்கள் அனைவரும் அறங்கூற்று மன்றத்தில் அணியப்படுத்தப் பட்டு கடப்பா சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், 12 தமிழர்கள் மீதான பிணை மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சித்தூர் மாவட்ட அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எத்தனை தமிழர்கள் கொல்லப் பட்டாலும், எத்தனை தமிழர்கள் சிறையில் அடைக்கப் பட்டாலும், ஏன் இந்த தமிழர்கள் வாகனங்கள் எல்லாம் வாங்கும் அளவிற்கு வசதிகள், வளமைகள் இருந்தும் இதே தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, சிந்திக்க வேண்டியது அந்தத் தமிழர்கள் அல்ல, என்பது மட்டும் உண்மை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,983.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.