Show all

பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைக்க முழு முயற்சி மேற்கொள்ளப்படும்

நடுவண் சிறு, குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா வருகை, அவரளித்த உறுதியான வார்த்தைகள், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மத்தியில், மகிழ்ச்சி அலையையும், நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. தெடக்க காலம் முதலே, இத்துறையினர் தங்கள் தேவையை, தாங்களே நிறைவேற்றி வந்ததால், தொழில் வளர்ச்சி சீராக இருந்து வந்தது.

தற்போது வங்கதேசம், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இடையேயான போட்டியை எதிர்கொள்வது சவாலாக உள்ளது.

உள்நாட்டு, ஏற்றுமதி வர்த்தக மதிப்பை, ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய, திருப்பூர் பின்னலாடை துறை யினர் முயற்சித்து வருகின்றனர். இதற்காக, தொழிலாளர் திறன் மேம்பாடு, உற்பத்தி செலவினம் குறைப்பு, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி என, பின்னலாடை துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தகம், இலக்கை அடைவதற்கு, நடுவண், மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டிய திட்டங்களையும், தொகுத்துள்ளனர். திருப்பூரின் தொழில்துறைத் தேவையை நிறைவு செய்ய, வர்த்தகத்துறை, நிதித்துறை, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, சிறு, குறு நிறுவன துறை, ஜவுளித்துறைகளின் உதவி கிடைப்பது மிகவும் அவசியமாகிறது. நடுவண் அரசு துறைகள், தொழில் வளர்ச்சிக்கு சாதகமான திட்டங்களை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற அடிப்படையில், 2014 முதல்,

‘வெற்றிப்பாதையில் திருப்பூர்’ நிகழ்ச்சிக்கு, நடுவண் அமைச்சர்களை, திருப்பூர் அழைத்து வருகின்றனர், தொழில் துறையினர்.

கடந்த, 2014ல் வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவரிடம் முன்வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றித் தந்தார். நடப்பாண்டு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. சிறு, குறு நிறுவனத் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா பங்கேற்றார். நடுவண் அமைச்சர்கள், குறிப்பிட்ட நிகழ்வில் மட்டும் பங்கேற்று, திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால், அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, ஒரு நாள் முழுவதும் பின்னலாடை தொழில்துறையை அலசி ஆராய்ந்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் காடு அனுமந்தராயர் கோவில்களில் தரிசனம் செய்தார். திருப்பூர் வரலாறை தெரிந்து கொண்டார்; மேடையில் பேசும்போதும், கோவில் வரலாறுகளை சுட்டிக்காட்டினார். ஆடை உற்பத்தி, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு, தொழிலாளர் பயிற்சி மையங்களைப் பார்வையிட்டார். தொழில் துறையினரிடம் யதார்த்தமாக பேசி பழகினார். தொழிலாளர்களிடமும், போதுமான சம்பளம் கிடைக்கிறதா என, கேட்டறிந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில்,

திருப்பூரை எனது சொந்த ஊராக நினைக்கிறேன். நீங்கள் என்ன கேட்டாலும், நிறைவேற்றித்தர மத்திய அரசு தயாராக இருக்கிறது, என்றார்.

மேலும், பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைக்க முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என, உறுதியும் அளித்தார். புத்தாண்டில் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், நடுவண் அமைச்சரின் வருகை, அவர் அளித்த வாக்குறுதிகள், பின்னலாடை துறையினர் மத்தியில் புது நம்பிக்கையை விதைத்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.