Show all

சபரிமலையில் மூன்றாவது பெண்ணும் அய்யப்பனை வணங்கி அசத்தல்! ஆனாலும் தொடர் வன்முறையில் ஹிந்துத்துவா அமைப்புகள்

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வணங்கிட அனைத்து அகவைப் பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலைக்கு பெண்களால் செல்ல முடியவில்லை. 

ஆனால் முந்தாநாள் அதிகாலையில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா அகவை 44, பிந்து அகவை 42 என்ற இரு பெண்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலையில் அய்யப்பனை வணங்கினர். இதனால் கோவில் நடை  அடைக்கப்பட்டு பரிகார பூசைகள் செய்யப்பட்டன.

  சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் நடுவே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் முந்தாநாள் முதலே மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறின. பதட்டமான நிலையே தொடர்கிறது.

நேற்று பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் திருவனந்தபுரத்தில் நடத்திய போராட்டத்தில், பல இதழியலாளர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த சாஜிலா. ஒளிப்பதிவாளர் சாஜிலா போராட்டத்தை காணொளி எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது போராட்டகாரர்கள் பெண் என்றும் பாராமல் அவரை பின்னால் இருந்து எட்டி உதைத்தனர். அதுமட்டுமின்றி அவரை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளனர். ஆனால் அவற்றை சிறிதும் கண்டுகொள்ளாத சாஜிலா தொடர்ந்து போராட்டத்தை செய்தியாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

பணியின் போது தாக்குதலை எதிர்கொண்டு, சாஜிலா அழுதுக் கொண்டே காணொளி எடுத்திருப்பது புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் அய்யப்பனை வணங்கியதற்கு எதிராக இவ்வாறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சசிகலா அகவை 46 என்ற பெண் தனது கணவர் சரவணன் மற்றும் மகனுடன் சபரிமலைக்கு வந்தார். இருமுடிக்கட்டுடன் வந்த அவரை மரக்கூட்டம் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் சசிகலாவை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும் அவரது கணவரும், மகனும் சபரிமலையில் அய்யப்பனை வணங்கினர்.

சசிகலா பம்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சபரிமலையில் பக்தர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனாலும் காவல்துறையினர் என்னை திருப்பி அனுப்பினர். நான் ஒரு அய்யப்ப பக்தை. 41 நாட்கள் விரதம் இருந்து வந்திருக்கும் என்னை கோவிலுக்குள் விடவில்லை. நான் யாருக்கும் பயப்படவில்லை. நீங்கள் ஏன் என்னை சுற்றி இருக்கிறீர்கள்? உங்கள் அனைவருக்கும் அய்யப்பன் பதில் தருவார் என்று ஆவேசமாக கூறினார். ஆனால் சபரிமலை கோயிலில் சசிகலா அய்யப்பனை வணங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளா காவல்துறையும் சசிகலா அங்கு அய்யப்பனை வணங்கியதை உறுதி செய்துள்ளனர். 

சபரிமலை கோவிலில் சசிகலா அய்;யப்பனை வணங்கும்  காட்சிகள் கண்காணிப்பு படக்கருவி காட்சியில் உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  சசிகலா அய்யப்பன் கோவிலுக்குள் வந்தார். அறங்கூற்று மன்றமோ, எந்தஒரு சட்ட முகமையோ ஆதாரம் கோரினால் அவர் கோவிலுக்குள் நுழையும் காணொளிக் காட்சியை சமர்ப்பிப்போம் என காவல்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,022.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.