Show all

இரண்டு பக்கமும் இடி மத்தளமாக மோடி

முறைகேடு புகாரில் சிக்கி, லண்டன் நகரில் தங்கியுள்ள ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரும் விவகாரம் குறித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா,

சுயபடங்கள், புகைப்படங்கள், தன் அடையாளத்தை விளம்பரப்படுத்துதல் ஆகியவற்றைத் தாண்டி, மோடியின் பிரிட்டன் பயணம் சிறிய அளவிலாவது சாதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். லண்டனுக்கு தப்பியோடிய கருப்புப்பண ஏற்றுமதியாளர் லலித் மோடியை, நாடு கடத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

பிரிட்டன் நாட்டு குடிமகன் இல்லாத யாரையும் உரிய நாட்டிடம் ஒப்படைப்பதற்கு பிரிட்டன் நாட்டின் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, சட்ட நுணுக்கங்களைக் காட்டி பிரதமர் மோடி தப்பிக்க முடியாது. லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வராவிட்டால், சின்ன மோடிக்கு பெரிய மோடி உதவுவதாகவே கருதப்படும் என்றார் ரண்தீப் சுர்ஜே வாலா.

இதனிடையே, லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திப்பு சுல்தானின் மோதிரத்தை, பிரதமர் மோடி இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சமாஜவாதி கட்சி பிரமுகரும், உத்தரப் பிரதேச அமைச்சருமான ஆஸம்கான் வலியுறுத்தினார்.

திப்பு சுல்தானின் மோதிரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த மோதிரத்தில் ராமபிரான் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த மோதிரத்தை மீட்டு, திப்பு சுல்தான் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பாஜக ஆதரவாளர்களிடம் காண்பிக்க வேண்டும் என்றார் ஆஸம் கான்.

இதனிடையே, இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்த விவகாரத்தை, மோடியுடனான பேச்சின்போது டேவிட் கேமரூன் எழுப்ப வேண்டும் என்று இந்திய எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அண்மையில் புக்கர் விருது அறிவிக்கப்பட்ட பிரிட்டன்-இந்திய எழுத்தாளர் நீல் முகர்ஜி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், டேவிட் கேமரூனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், சகிப்பின்மை விவகாரம் குறித்து வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையிலும் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.