Show all

குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்தது திருப்பதி நீதிமன்றம்

ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் திருப்பதி அருகே கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே, கடந்த 2013 ம் ஆண்டு வனத்துறை அதிகாரிகள் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பதி 3 வது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

 

குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும்  நீதிமன்றத்தில் அழைத்து வருவது சிரமம் என்பதால்,  திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை கல்லூரியில் உள்ள ஸ்ரீ சீனிவாசா விளையாட்டு அரங்கில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது.

 

 நீதிபதி ராஜாராம் தீர்ப்பை அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். இதனை அடுத்து அனைவரும் ஒரிரு நாளில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

விடுதலை செய்யப்பட்டவர்களில் 287 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பற்றிய விவரங்கள் :

     திருப்பதி அருகே, சேஷாச்சல வனப்பகுதியில் 2013 ஆண்டு டிசம்பர் 15ம் தேதி செம்மரம் கடத்தி வந்தவர்களைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதர், மற்றும் டேவிட் கருணாகரன் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அப்பகுதியில் இருந்த 356 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இந்த வழக்கின் முதல் விசாரணை திருப்பதி 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. முதலாவது விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். கைது செய்யப்பட்ட 356 பேரில் 4 பேர் சிறுவர் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பபட்டனர்.

 

இதில் ஆந்திராவைச் சேர்ந்த 60 பேர் பிணையில் வெளியாகினர். வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மீதமிருந்த 287 பேரில், திருப்பதி சிறையில் 139 பேரும், ஸ்ரீ காளஹஸ்தி சிறையில் 58 பேரும், பீலேரு சிறையில் 90 பேரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

 

இதில் தற்போது சிறையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 287 பேரும், பிணையில் வெளிவந்துள்ள 60 பேர் மற்றும் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் உள்ள 4 பேர் என மொத்தம் 351 பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கபட்டது. கொலை வழக்கு ஒன்றில் 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.